மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மறைமுக பாஜக ஆட்சிதான்: சிவசேனா கடும் விமர்சனம்

மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது என்பது நன்கு திட்டமிட்டு எடுக்கப்பட்ட செயலாகும். அது மறைமுகமாக பாஜகவின் கரங்களில்தான் இருக்கிறது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. மகாராஷ்டிராவில் நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

இதனால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்ததையடுத்து மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் பேச்சில் ஈடுபட்டு வருகின்றன. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டதை சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளாடேனா சாம்னாவில் கடுமையாக விமர்சித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கண்களுக்குத் தெரியாத சில சக்திகள் மாநில அரசியலைக் கட்டுப்படுத்தி, அதற்கு ஏற்றார்போல் முடிவை எடுக்க வைக்கின்றன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதாது, கூடுதல் அவகாசம் தேவை எனக் கோரியபோது ஆளுநர் அதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றி முடிவுகளை எடுக்கவில்லை.

13-வது சட்டப்பேரவை முடியும் வரை ஆளுநர் காத்திருந்தார். ஆனால் புதிய ஆட்சி அமைவதற்கான முன்னெடுப்பை அவர் முன்கூட்டியே எடுத்தாரா இல்லையா. குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்த ஆளுநரின் செயல் விதிகளின்படி சரியாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு புதிய ஆட்சி அமைக்க 6 மாதம் அவகாசமும் அளித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது திட்டமிடப்பட்ட செயல். இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆளுநர் இதற்குமுன் ஒரு ஆர்எஸ்எஸ் அமைப்பில் நிர்வாகியாக இருந்தவர் உத்தரகாண்டில் முதல்வராக இருந்தவர். ஆனால் மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் அதன் சூழல், நிலவியல் சூழல், வரலாறு ஆகியவற்றை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். சிவசேனா ஆட்சி அமைக்க 48 மணிநேரம் அவகாசத்தை ஆளுநர் வழங்காதபோது ஏதோ தவறு நடக்கிறது, தவறான செயல் நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டபின் துரதிர்ஷ்டவசமானது என்று பட்னாவிஸ் கூறுகிறார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பட்னாவிஸ் கவலைப்பட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து யாரேனும் முதலைக் கண்ணீர் வடித்தால் அது கேலிக்கூத்துதான். எனவே குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது, மறைமுகமாக பாஜக கரங்களில் இருப்பது போன்றதுதான். ஆட்சி அதிகாரத்தை விட்டு இறங்கியவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சியால் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: