விஜயவாடாவில் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரதம்.: செயற்கை மணல் தட்டுப்பாட்டை ஜெகன்மோகன் அரசு ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு!

விஜயவாடா: ஆந்திராவில் செயற்கை மணல் தட்டுப்பாட்டை ஜெகன்மோகன் அரசு ஏற்படுத்தியுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மணல் தட்டுப்பாட்டினை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் கட்சியினர் விஜயவாடாவில் மணல் மீட்பு  என்ற பெயரில் 12 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு மணல் தட்டுப்பாடு பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, மோதல் போக்கை கடைபிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், மணல் தட்டுப்பாடு காரணமாக கூலித் தொழிலாளிகள் முதல் தச்சுத் தொழிலாளிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கட்டுமானம் சார்ந்த 125 தொழில்கள் முடங்கிக் கிடக்கின்றன. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 35 லட்சம் தொழிலாளர்களின் வருமானம் கேள்விக்குறியாகிவிட்டது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தான் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

மணலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆந்திராவில் கட்டுமான துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார். ஆனால், குற்றச்சாட்டினை மறுத்துள்ள ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு மணல் தட்டுப்பாடு என்று நாடகமாடுவதாக கூறியுள்ளனர். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களையும் ரத்து செய்து வருகிறது. ஏற்கனவே கிருஷ்ணா நதிக்கரையில் விதிகளை மீறி கட்டியதாக சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்தமான 8 கோடி மதிப்பிலான பிரஜா வேதிகா என்ற சொகுசு பங்களாவை இடித்து தள்ளியது. தற்போது மணல் விற்பனை குறித்து கொள்கை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: