நாம் குடிக்கும் பால்... விஷமா? ஷாக் ரிப்போர்ட்

இதுவரை நம்மை பயமுறுத்தி வந்த ஒரு விஷயம் பாலில் கலப்படம்.

இப்போது ‘பாலில் நச்சு உள்ளது’ என்று ஓர் ஆய்வு பீதியைக் கிளப்பியிருக்கிறது. அதிலும் நச்சு கலந்த பால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தமிழ்நாடு என்பது இன்னும் அதிர்ச்சி.மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுகளுக்கான அமைப்பு உணவு தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு ‘அஃப்லாடாக்சின் எம்ஐ (AFLATOXIN MI)’ எனும் நச்சு பாலில் கலந்திருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது.

இந்த ஆய்வுக்காக இரண்டு வகையான பாலை எடுத்துக்கொண்டார்கள். ஒன்று ரா மில்க். அதாவது கறந்த உடனே விற்கப்படும் பால். இது எண்ணிக்கையில் மிகக் குறைவு. அடுத்து தனியார் மற்றும் கூட்டுறவு அமைப்புகளால் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பால் மற்றும் பால் பொருட்கள்.

உதாரணமாக பாக்கெட் பால், பட்டர், சீஸ். இதுதான் இந்தியாவில் அதிகமாக நுகரப்படுகிறது. இந்த அஃப்லாடாக்சினால் தொற்றுநோயிலிருந்து புற்று நோய் வரை வரலாம் என்கிறது அந்த ஆய்வு. இது தொடர்பாக ஆர்வலர்களைச் சந்தித்து உரையாடினோம்.

‘‘கறப்பதற்கு முன்பே பாலில் கலப்படம் உண்டாகிறது என்பதுதான் கொடுமை. பால் அதிகமாக சுரப்பதற்கு ஆக்சிடோஸின் எனும் ரசாயனத்தை மாடுகளுக்கு ஊசி மூலம் செலுத்துகிறார்கள். இது புது தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் ஒரு மருந்து. பிரசவத்துக்குப் பின் பல தாய்மார்கள் உடல் நலிவடைந்து இருப்பார்கள். குழந்தைக்குப் பால் ஊட்டுவது கூட சிரமம். இந்நிலையில் ஆக்சிடோஸின் பாலை விரைவாக சுரக்கத் தூண்டும்.

இந்த அடிப்படையில்தான் மாடுகளுக்கும் இதைக் கொடுக்கிறார்கள். இது தடைசெய்யப்பட்டு இருந்தாலும் மருந்துக்கடைகளில் தாராளமாக கிடைக்கிறது. ஆக்சிடோஸின் ஊசி போட்டால் 5 லிட்டர் பால் கொடுக்கும் பசுமாடு கூட 8 லிட்டர் தரும்.  

கறந்தவுடனே விற்கப்படும் பாலில் கேடுகள் குறைவு. ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பாலில் கேடுகள் அதிகம். ஏனென்றால் பால் கெட்டுப்போகாமல் இருக்க யூரியா போன்ற உரங்களையும், பால் கெட்டியாக இருக்க ஸ்டார்ச் எனும் தாவரக் கஞ்சிகளையும் பாலில் கலக்குகிறார்கள்.

தாவரக் கஞ்சியில் சோடியம் பைகார்பனேட் எனும் இரசாயனம் உள்ளது. இதுவும் உடலுக்குக் கேடானது. தவிர, பாலின் வண்ணம் மாறக்

கூடாது என்பதற்காக வாஷிங் சோடா போன்ற கெமிக்கலையும் பயன்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற எல்லா இரசாயனங்களுமே மாட்டின் உடலுக்கும், மாட்டின் மூலமாக கிடைக்கும் பாலை அருந்தும் நம் உடலுக்கும் தீங்கானவை...’’ என்று ஆரம்பித்தார் சோமசுந்தரம். சென்னையில் செயல்படும் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எனும் அமைப்பின் தொடர்பு அதிகாரி இவர்:

‘‘மாடுகளுக்குத் தீவனமாக புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, வைக்கோல் போன்றவை கொடுக்கப்படுகிறது. இவற்றைக் கொடுப்பதற்கு முன்பு சோதிக்க வேண்டும். ஈரம் பட்டு தூசு, மாசுகள் இருந்தால் தீவனத்தில் ஃபங்கஸ் எனும் பூஞ்சைகள் உருவாகும். இதை உண்ணும் மாடுகளின் பாலில்தான்அஃப்லாடாக்சின் போன்ற  நச்சுக் கிருமிகள் உண்டாகிறது.

இந்த நச்சுக் கிருமி மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட சாம்பிள்களில் இருந்ததாகச் சொல்கிறார்கள். சென்னையில் சாம்பிள்களை சோதித்ததற்கான தடயம் இல்லை. இந்த நச்சு எல்லா இடங்களுக்கும் பரவாது என்று சொல்லமுடியாது. பரவுவதற்கு முன்பாக அரசும் பால் உற்பத்தியாளர்களும் இதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய தேவை...’’ என்று சோமசுந்தரம் முடிக்க, கால்நடைக்கான மருந்து மற்றும் இரசாயனத்துறை சார்ந்து ஹைதராபத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் மருத்துவர் ஷிவா இது தொடர்பாக மேலும் விவரித்தார்:

‘‘கால்நடைகளுக்கான தீவனம் சுகாதார முறையில் இல்லாதபோது ஏற்படும் ஒரு நோய்க்கிருமிதான் அஃப்லாடாக்சின் என்னும் நச்சு. இது அதிகமானால் விஷமாகும். மாட்டுத் தீவனமான பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவை இயற்கையாகவே ஈரத்தன்மை. மிக்கவை. அதனால் இதில் பூஞ்சைகள் உருவாவது இலகுவாக நடக்கும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மண்ணில் வளரும்போதே அவற்றுள் பூஞ்சைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் அவை மண்ணில் இருக்கும்போதே பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அறுவடைக்குப் பிறகு பூஞ்சைகள் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்து மாடுகளுக்குக் கொடுக்கலாம்.தினமும் பாலுக்கு டிமாண்ட் உள்ளது. அதனால் அன்றாடமும் பால் கறப்பு நடக்கிறது. தீவனத்தையும் அன்றாட விஷயமாகக் கருதாமல் அதை சிறப்பாக பராமரித்துக் கொடுப்பதன் மூலம் இந்த நச்சிலிருந்து நாம் தப்பிக்கலாம்.

உதாரணத்துக்கு மாட்டுத் தீவனங்களை வெயிலில் காயவைப்பதன் மூலம் பூஞ்சைகள் வளராமல் தடுக்க முடியும். உலகம் முழுவதும் மாட்டுத் தீவனத்தில் 25 சதவீதம் அஃப்லாடாக்சின் இருப்பதாகச் சொல்கிறார்கள். உலக அளவில் மாடுகளின் எண்ணிக்கையிலும் பால் உற்பத்தியிலும் முன்னணியில் இருக்கும் ஒரு நாடு இந்தியா.

ஆனால், ஒரு தனிப்பட்ட மாட்டை எடுத்துக்கொண்டால் மேற்கு உலகில் இருக்கும் மாட்டைவிட நம் மாடு குறைவான பாலையே தருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வெண்மைப் புரட்சி எனும் பெயரில் கலப்பு இன மாடுகள் இங்கே அறிமுகமாயின. இது தேவையானதுதான். இப்போது இந்தியாவில் 25 சதவீதம் கலப்பு இன மாடுகள்தான் உள்ளன.

ஆனால், கலப்பு இன மாடுகளுக்குக் கொடுக்கும் தீவனத்தில் குறை இருக்கிறது. வெளிநாட்டு கலப்பு இன மாடுகள் 20 லிட்டர் பால் கொடுக்கிறது என்றால் நம் கலப்பு இன மாடுகள் வெறும் 7 லிட்டர்தான் தருகிறது. காரணம், நாம் கொடுக்கும் தீவனத்தின் தரம்...’’ என்கிற ஷிவா இந்தப் பிரச்னைகளுக்கான காரணத்தையும் பட்டியலிட்டார்.

‘‘பால் உற்பத்தியாளரிடமிருந்து ஒரு லிட்டர் பால் ரூ.28க்கு வாங்கப்படுகிறது. அதே ஒரு லிட்டர் பாலை நுகர்வோருக்கு விற்கும் விலை ரூ.46. பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக கொள்முதல் விலையைக் கொடுக்கும் போது தீவனத்தின் தரமும் உயரும். உண்மையில் ஒரு பால் உற்பத்தியாளர் தண்ணீர் கலக்காத பாலைத்தான் பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகிக்கிறார். இந்தப் பாலை நாம் 60 ரூபாய் கொடுத்தாவது வாங்குவோம். இப்படியிருக்க வெறும் 28 ரூபாய் கொடுத்தால் அந்த பால் உற்பத்தியாளர் நல்ல தீவனத்தைக் கொடுக்க முடியுமா?

அஃப்லாடாக்சின் பிரச்னை தீரவேண்டுமென்றால் பல முனைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அஃப்லாடாக்சின் பாலை வாங்கமாட்டோம் என்று கூட்டுறவுச் சங்கம் சொன்னால் மட்டும் போதாது.

அவர்கள் நல்ல தீவனத்தையும் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்...’’ என்றவர் அஃப்லாடாக்சின், மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்னைகளையும் பட்டியலிட்டார்‘‘கல்லீரல் மற்றும் சிறுநீரக புற்றுநோயை உண்டாக்கலாம் என்று மருத்துவர்கள்சொல்கிறார்கள். அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கிறது.

இதனால் தொடர்ச்சியாக சளி, காய்ச்சல் பிரச்சனை ஏற்படும். உடனடியாக இந்த நச்சை முறியடிக்க வேண்டுமென்றால் டாக்சின் பைண்டர் (toxin binder) என்னும் உணவுச் சேர்க்கை உண்டு. இதை மாட்டுத் தீவனத்தில் கலந்துவிட்டால் தீவனத்தில் உள்ள நச்சை இந்த மருந்து உள்வாங்கி அதை சாணமாக வெளியேற்றும். மொத்தத்தில் இதுதொடர்பாக பல கட்டங்களில் செயல் படும்போதுதான் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ஷிவா.      

 

டி.ரஞ்சித்

Related Stories: