காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படையின் ‘இஸட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு

டெல்லி: காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படையின் ‘இஸட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு  கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனைக் கண்டித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பேரில் சோனியா குடும்பத்தினருக்கான பாதுகாப்பு பொறுப்பை மத்திய ரிசர்வ் படையினர் ஏற்றுக் கொண்டனர். இதன்படி சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் சோனியா காந்தியின் வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அதே போன்ற படையினர் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரின் இல்லத்தைச் சுற்றியும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு அவர் மனைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 28 ஆண்டுகளாக இருந்து இந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சி.ஆர்.பி.எஃப் வீரர்களை கொண்ட Z பிளஸ் பாதுகாப்பு மட்டும் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். சோனியா உள்ளிட்ட மூவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது அதிர்ச்சி தருவதாகவும், இது பாஜக அரசின் தனிப்பட்ட பழிவாங்கல் மனோபாவத்தை காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

இரு முன்னாள் பிரதமர்களின் உயிர்களை பலி கொடுத்துள்ள குடும்பத்திற்கு பாதுகாப்பை வாபஸ் வாங்கியது சரியல்ல என்றும் அவர் கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தங்கள் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை என்பதையும் ஆனந்த் சர்மா சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் சிறப்பு படை பாதுகாப்பை வாபஸ் பெற்ற முடிவை கண்டித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டின் முன் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்த சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: