ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..: பாதுகாப்பு படையினர் அதிரடி!

பந்திபோரா: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் அதிரடியாக சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து அறிவித்தது. இதன்பின்பு இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் சாதாரண ஆயுதங்களை கொண்டும், சில நேரங்களில் பெரிய வகை ஆயுதங்களை கொண்டும் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய தரப்பில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள லாதூரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள லாதூரா பகுதியில், பகங்கரவாதிகள்-பாதுகாப்பு படையினர் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இதே பகுதியில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: