அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள்

1 தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்: இவர் அச்சமின்றி முடிவெடுக்கும் தைரியமான நீதிபதி. அயோத்தி வழக்கை இவரது தலைமையிலான அமர்வு 40 நாள் தொடர்ந்து விசாரித்து தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. நாட்டின் 46வது தலைமை  நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்பேற்ற இவர், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு வந்த முதல் நீதிபதி. இவரது பதவிக்காலம் வரும் 17ம் தேதி முடிகிறது. இவர் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றது  முதல் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளார்.  உச்ச நீதிமன்றத்தின் பெண் ஊழியர் ஒருவர் இவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். நீதிபதி பாப்டே தலைமையிலான் 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவில் இவர்  குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டார். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். அவர்களில் இவரும் ஒருவர். உச்ச நீதிமன்ற நிர்வாகத்திலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். தவறு செய்த  நீதிபதிகளை பணிமாற்றம் செய்ய பரிந்துரைத்தார். ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவரை ராஜினாமா செய்ய வைத்தார்.

2 நீதிபதி பாப்டே:  உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே(63) வரும் 18ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘இருக்கையை விட்டு எழுந்தவுடன், நீதிமன்றத்தில் நடக்கும் சம்பவங்களை  மறந்து விடுவேன்’ என கூறினார். தனிநபர் ரகசியம் ஒருவரின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் இவரும் ஒருவர். ஆதார் கார்டு இல்லை என்பதற்காக  ஒருவருக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2015ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த அமர்வில் பாப்டேவும் இடம் பெற்றிருந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், கடந்த 2013ம்  ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.  

3 நீதிபதி அப்துல் நசீர்: அயோத்தி வழக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நீதிபதி அப்துல் நசீரும் இடம் பெற்றிருந்தார். முஸ்லிம் தரப்பு வாதங்களை இவர் ஏற்கவில்லை. மற்ற நீதிபதிகளுடன் இணைந்து  ஒருமனதான தீர்ப்பை வழங்கினார். முத்தலாக் விவகாரத்தை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்விலும் இவர் இடம் பெற்றிருந்தார். ஆனால், முத்தலாக் என்பது சட்ட விரோதம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என 3:2  என்ற விகிதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் இவர் மாற்று தீர்ப்பை அளித்தார். அயோத்தி வழக்கை அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வில் முதலில் இவர் இடம் பெறவில்லை. நீதிபதிகள் ரமணா, யு.யு.லலித் ஆகியோர் இந்த அமர்வில் இருந்து  விலகியதால், நீதிபதி அப்துல் நசீர் சேர்க்கப்பட்டார். இவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு தேர்வு

செய்யப்பட்டவர்.

4 நீதிபதி சந்திராசூட்: இவர் உச்சநீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. அயோத்தி வழக்கு போல் இவர் பல முக்கிய தீர்ப்புகளை வழங்கிய அமர்வில் இடம் பெற்றுள்ளார். கள்ளக்காதல், தனிநபர் ரகசியம் உரிமை,  ஐபிசி 377 பிரிவை குற்றமற்றதாக்கியது, சபரிமலை விவகாரம், ஆதார் வழக்கு உட்பட பல வழக்குகளில் இவர் சிறப்பான தீர்ப்பு வழங்கியுள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில் இவர் வரும் 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி பொறுப்பு வகிப்பார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பாப்டேவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனியர் நீதிபதி இவர்தான்.

5 நீதிபதி அசோக் பூஷன்: அயோத்தி வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டபோது, முதலில் இவர் இடம் பெறவில்லை. நீதிபதிகள் ரமணா, யு.யு.லிலித் ஆகியோர் வெளியேறியதால், இந்த அமர்வுக்கும் அசோக் பூஷனும், அப்துல்  நசீரும் வந்தனர். ஆதார் எண்ணை, பான் எண்ணுடன் இணைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இவரும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் நிராகரித்தனர். மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டபோது, அதை தீர்த்து  வைக்கும் வழக்கிலும் இவர் அதிகாரத்தை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பகிர்ந்து தீர்ப்பளித்தார். தலைமை நீதிபதியின் நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கிலும், தலைமை நீதிபதியே நீதித்துறையின் தலைவர் என இவர் தீர்ப்பளித்தார்.  உ.பி.யைச் சேர்ந்த இவர் கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தீர்ப்பை எதிர்க்கும் திட்டம் கிடையாது: சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, அனைத்து முஸ்லிம் சட்ட வாரிய அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தனர்.  அப்போது, சன்னி வக்பு வாரியத்தின் சார்பில் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்  சப்பாரியாப் ஜிலானி கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். இருப்பினும், எங்களுக்கு இந்த தீர்ப்பில் திருப்தியில்லை. அதே நேரம், தீர்ப்பை யாருடைய தனிப்பட்ட வெற்றி தோல்வியாக கருதக் கூடாது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்  அனைத்து கருத்துக்களையும் நாங்கள் மறுக்கவில்லை. தீர்ப்பை முழுமையாக பரிசீலித்த பிறகு, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்,’’ என்றார்.

ஆனால், தீர்ப்பை எதிர்க்கும் முடிவை இந்த அமைப்பு மாற்றிக் கொண்டது. உத்தர பிரதேச சன்னி மத்திய வக்பு வாரியத்தின் தலைவர் சபார் அகமது பரூக்கி அளித்த பேட்டியில், ‘‘தீர்ப்பை வரவேற்கிறோம். இதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்  செய்யும் திட்டம் எதுவுமில்லை. தீர்ப்பை முழுமையாக பரிசீலித்த பிறகு, விரிவாக அறிக்கை வெளியிடப்படும். தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் வழக்கறிஞரோ அல்லது வக்பு வாரியத்துக்கு சம்பந்தப்பட்ட வேறு நபர்களோ  கூறியிருந்தால், அது சரியான தகவல் அல்ல,’’ என்றார்.

Related Stories: