மதுரையில் பயனின்றி கிடக்கிறது பாலம்

* பாழாகும் ரூ.பல கோடி மக்கள் வரிப்பணம்  

* போக்குவரத்து மாற்றங்களை அறிவித்து
Advertising
Advertising

 வாகனங்கள் இயக்கப்படுமா?

மதுரை : மதுரையில் ரூ.பல கோடி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலம், பயன்பாடின்றி போட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழியாக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. மதுரை நகரானது அன்றாடம் வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. அதிகரித்து வரும் வாகனங்களால் நகருக்குள் நெரிசல் தவிர்க்க முடியாததாகி, ‘பீக் அவர்’ எனப்படும் காலை, மாலை நேரங்களில் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து, காத்திருந்து மக்கள் அவதிப்படுகின்றனர். போலீசாருடன், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து நகருக்குள் நெரிசல் பகுதிகளை கண்டறிந்து, இங்கெல்லாம் போக்குவரத்து மாற்றங்களைச் செயல்படுத்துவதன் மூலமே நெரிசலைத் தீர்க்கலாம்.

குறிப்பாக, மதுரையில் சிம்மக்கல் - செல்லூர் இடையே வைகையாற்றின் குறுக்கே எம்ஜிஆர் பெயரில் பாலம் கட்டப்ட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் அரசு நிதியில் கட்டப்பட்டு, இந்த பாலம் திறக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் இந்த பாலத்தில் எப்போதோ ஒருமுறைதான், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் வாகனங்கள் இயக்கம் கொஞ்சமும் இல்லாத நிலையில், வைகையாற்றின் குறுக்கே உள்ள மற்றொரு பாலமான யானைக்கல் பாலத்தில் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜன் கூறும்போது, ‘‘சிம்மக்கல் - செல்லூரை இணைக்கும் பாலம் கட்டி 3 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இந்த பாலம் பயன்பாடின்றி போட்டு வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள், மாலை நேரங்களில் பொழுது போக்காக வந்து அமர்ந்து, பேசி எழுந்து செல்லவே ரூ.பல கோடி செலவழித்துக் கட்டப்பட்ட இந்த பாலம் பயன்படுகிறது. இந்த பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்தாத நிலையில் இருக்கிறது. ஆனாலோ, நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்த பாலத்தின் வாகனங்களை பிரித்து அனுப்பி, போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்தினால் நகர் நெரிசலும் தீரும்.

நகருக்குள் இருந்து திண்டுக்கல் ரோட்டை சென்றடைய இந்த சிம்மக்கல்-செல்லூர் பாலத்தை பயன்படுத்தலாம். இதுதவிர, குறிப்பிட்ட ஊர்களுக்கான அரசு பஸ்களையும் இந்த பாலத்தின் வழியாக திருப்பி விடலாம். மேலும் பாலத்தின் துவக்க பகுதிகளில் பெருமளவு ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. இவை அகற்றப்பட வேண்டும். மேலும் இந்த பாலத்தில் அதிகளவில் வாகனங்கள் இயக்கும் வகையி்ல் போலீஸ், மாவட்ட, மாநகராட்சி, போக்குவரத்து நிர்வாகங்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்’’ என்றார்.

Related Stories: