சேலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி: போட்டி போட்டு பணத்தை எடுத்தனர்!

சேலம்: சேலம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் இன்ப அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணத்தை எடுத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் பாரத ஸ்டேட் பாங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு 3 ஏ.டி.எம். இயந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையம் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் 24 மணி நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இங்குள்ள ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் 200 ரூபாய் எடுத்தவர்களுக்கு 500 ரூபாய் பணம் வந்தது. ஆனால் வங்கி கணக்கில் 200 ரூபாய் மட்டுமே குறைவதாக குறுந்தகவல் செல்போனுக்கு வந்துள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியால் திளைத்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு பணம் எடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து உறவினர்கள், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அந்த ஏ.டி.எம். முன்பு கூட்டம் அலைமோதியது.

நள்ளிரவு வரை அங்கு திரண்ட வாடிக்கையாளர்கள் முட்டிமோதிக்கொண்டு பணத்தை எடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கசிந்தது. அவர்கள் அங்கு விரைந்து வந்து உடனே ஏ.டி.எம். மையத்தை மூடினர். அப்போது அங்கு பணம் எடுக்க நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவம் குறித்து டெக்னீசியன்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் வராததால் தொடர்ந்து அந்த ஏ.டி.எம். மையம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து பேசிய வங்கி அதிகாரிகள், பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். என்றாலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் 200 ரூபாய் நிரப்ப வேண்டிய ரேக்கில் 500 ரூபாய் நிரப்பியதால் இந்த குளறுபடி ஏற்பட்டிருக்கலாம். இதுவரை எவ்வளவு பணம் இதுபோன்று போனது என்று தெரியவில்லை. இதற்கான நஷ்டத்தை பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

Related Stories: