கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் 60 அடி பள்ளத்தில் உருண்டது சுற்றுலா பஸ்: குஜராத்தை சேர்ந்த இளம்பெண் பலி; 20 பேர் படுகாயம்

பழநி: கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் சுமார் 60 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் உருண்டு விழுந்ததில் சூரத்தை சேர்ந்த பெண் பலியானார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து 21 பேர் கொண்ட  குழு கடந்த அக். 29ம் தேதி பஸ்சில் சுற்றுலா கிளம்பினர். இக்குழுவினர் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு  வந்தனர்.பின்னர் நேற்று மாலை பழநி மலைச்சாலை வழியாக  ஊர் புறப்பட்டனர். கொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் வட்டமலை அருகே பஸ் வந்தபோது ஒரு வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து கொண்டு சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தது.  பஸ் உருண்டபடியே சென்றதால் சுமார் 60 அடி ஆழத்தில் மரங்களில் சிக்கிக் கொண்டது.

பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரல் எழுப்பினர். அந்த வழியாக சென்றவர்களின் தகவலின்படி பழநி போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்கு அடியில் சிக்கிய சூரத்தை சேர்ந்த தேவிஷா (26) என்ற  பெண்  பலியானார். படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்சின் அடியில் சிக்கி கொண்ட சிறுவன் ஹேக்கை மீட்கும் பணி ஒரு மணிநேரத்திற்கும் மேல்  நடந்தது.

Related Stories: