அயோத்தி தீர்ப்பையொட்டி பாதுகாப்பு ஏற்பாடு கோவையில் டிஜிபி திரிபாதி அதிகாரிகளுடன் ஆலோசனை

கோவை: கோவை, நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி கோவையில் நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகேயுள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். குண்டு காயத்துடன் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள-தமிழக எல்லையான நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்தும், அயோத்தி வழக்கில் இன்னும் சில தினங்களில் தீர்ப்பு வருவதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக காவல்துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதி கோவை வந்தார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் நேற்று ஆலோசனை நடந்தது. இதில் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி சுனில்குமார், எஸ்.பி. மூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அப்போது கோவை, நீலகிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அயோத்தி வழக்கில் 13ம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் அசம்பாவித சம்பவம் நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், டிஐஜி கார்த்திகேயன், துணை போலீஸ் கமிஷனர்கள், எஸ்பிக்களுடன் டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தினார்.

Related Stories: