கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாய்லாந்தில் 15 பேர் பலி

யாலா : தாய்லாந்தில் முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தில் வசிக்கும் மலாய் முஸ்லிம் தீவிரவாதிகள், கூடுதல் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வருகின்றனர். இந்த நாட்டின் தென்பகுதியில் உள்ள 3 மாகாணங்களில் அடிக்கடி வன்முறையும், மோதலும் நடைபெற்று வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த கலவரத்தில் 7,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், யாலா மாகாணத்தில் உள்ள இரு சோதனை சாவடிகளை அப்பகுதி மக்கள், தன்னார்வலர்களாக பராமரித்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் அவ்வழியே வந்த முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை வழிமறித்தனர்.  அப்போது, தன்னார்வலர்களுடன் கிளர்ச்சியாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டனர்.

Advertising
Advertising

இதில், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் உள்பட 12 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். மேலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகினர். மேலும், ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 15 ஆனது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், கிளர்ச்சியாளர்கள் விட்டு சென்ற வெடிபொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். கடந்த வாரம் பாங்காக்கில் நடைபெற்ற ஏசியான் மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் பலர் வந்திருந்த நிலையில் அங்கு பல சிறிய குண்டுகள் வெடித்த நிலையில், தற்போது மீண்டும் நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: