வாட்ஸ் அப் உளவு விவகாரம் நாடாளுமன்ற குழு 20ம் தேதி விசாரணை

புதுடெல்லி: வாட்ஸ் அப் உளவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 20ம் தேதி விசாரிக்க உள்ளது.இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற கண்காணிப்பு நிறுவனம், பெகாசஸ் என்ற தொழில்நுட்பத்தின் மூலம், உலக முழுவதிலும் 1,400 பேரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்தது. இதில், இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களும் அடங்குவர் என வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதம் 31ம் தேதி அதிர்ச்சி தகவல் வெளியிட்டது.இது, அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிக்கை தர மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உத்தரவிட்டார். இந்நிலையில், வாட்ஸ் அப் உளவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையிலான தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு வரும் 20ம் தேதி நடக்கும் தனது அடுத்த கூட்டத்தில் விசாரிக்க இருப்பதாக  கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சசிதரூர், குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘இந்த விஷயத்தில் ஆளும் தரப்பும், எதிர் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக அதிகார பலத்தை தவறாக பயன்படுத்துவதை தடுத்திட தேவையான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார். இதே போல்,  உள்துறை அமைச்சக நாடாளுமன்ற நிலைக்குழு இதுபற்றி விசாரிக்க உள்ளது.

Related Stories: