தெலங்கானாவில் பயங்கரம் பெண் தாசில்தாரை எரித்துக்கொன்றது ஏன்?

* காப்பாற்ற முயன்ற டிரைவர் சிகிச்சை பலனின்றி பலி

* கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்.

திருமலை: தெலங்கானாவில் பெண் தாசில்தாரை எரித்துக்கொன்றது ஏன் என்று கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையே தாசில்தாரை காப்பாற்ற முயன்ற டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், அப்துல்லபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்த தாசில்தார் விஜயாவை அதே தாலுகா, கவ்ரெலி கிராமத்தை சேர்ந்த சுரேஷ், பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்தார். இதில் சுரேஷ், டிரைவர் குருநாதம், அலுவலக உதவியாளர் சுந்தரய்யா, பட்டா மாற்றம் செய்ய வந்த 70 வயது நாராயணா உட்பட 4 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இந்நிலையில் டிரைவர் குருநாதம்  80 சதவீத தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் நாராயணாவும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட கொலையாளி சுரேஷ், தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

பாச்சாரம் கிராமத்தில் உள்ள 412 ஏக்கர் நிலம், சுமார் 70 ஆண்டுகளாக பல விவாதங்களுக்கு மையமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த  ராஜா ஆனந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து 130 ஏக்கரை மாநில அரசு தங்களுக்கு வழங்கியதாக சையது யாசின் என்பவரின் வாரிசுதாரர்கள் உரிமை கோரி வருகின்றனர். மேலும் சுரேஷ் உட்பட கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக அந்த நிலத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலம் ஐதராபாத் அவுட்டர் ரிங்ரோடு அருகில் உள்ளதால் இதன் மீது  பல அரசியல் தலைவர்களின் பார்வையும்  உள்ளது. இதனால் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய பலர் முயற்சி செய்கின்றனர். இந்நிலையில் சுரேஷ், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் 40 கோடி மதிப்புள்ள நிலத்தின் ஒருபகுதியை தனக்கும், தனது சகோதரருக்கும் இடையே பிரித்து பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக தாலுகா அலுவலகத்தை சுற்றி வந்துள்ளார்.

ஆனால் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும் இதில் தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று வருவாய்த்துறையினர் கூறி வந்தனர். இதற்கிடையே தாசில்தார் விஜயா, சுரேஷின் சகோதரருடன் இணைந்து ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு அந்த நிலத்தை வழங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்ததால் தாசில்தார் விஜயாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக சுரேஷிடம் நடத்திய விசாரணையில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

Related Stories: