ப்ளடி ராஸ்கல் போனை வை...என எரிந்து விழுந்தார் ஆழ்துளை கிணற்றை மூடும்படி கூறியவரிடம் கலெக்டர் கடுகடு

கரூர்:  திருச்சி மாவட்டம் மணப்பாறை  அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி  விழுந்து 2 வயது குழந்தை சுஜித் இறந்தான். இதை தொடர்ந்து தமிழகம்  முழுவதும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்  மூடப்பட்டு வருகிறது.

கரூர்  மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா செம்பியநத்தம் கிராமத்திலும் ஒரு ஆழ்துளை  கிணறு மூடப்படாமல் உள்ளது. இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்  ஒருவர், கலெக்டர் அன்பழகனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். ஆனால்  அவரை, அன்பழகன் தரக்குறைவாக பேசி போனை துண்டித்தார். இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உரையாடல் வருமாறு:

சமூக ஆர்வலர்: சார், செம்பியநத்தத்தில் இருந்து பேசுறேன் சார்...இங்க இன்னும் போர்வெல் குழி மூடாம இருக்கு சார்...

கலெக்டர்: எந்த தாலுகாங்க..

ச.ஆ: தரகம்பட்டி, குளித்தலை சார்..

கலெக்டர்: அங்க பி.டி.ஓ.னு ஒருத்தர் இருக்கார் தெரியுங்களா. அவருக்கிட்ட பேசுனா தரக்குறைவா நீங்க நினைக்கிறீங்களா...

ச.ஆ: இல்லைங்க சார்... இன்பார்ம் பண்ணிட்டோம். இன்னும் ஸ்டெப் எடுக்காம இருக்காங்க..

கலெக்டர்: அவர நேர்ல போய் பாத்தீங்களா..

ச.ஆ: இல்ல சார்... அவரு ஆபீசுக்கே வரல..

கலெக்டர்: என்னக்கி போனீங்க..

ச.ஆ: மணப்பாறையில சம்பவம் நடந்தப்பவே (நடுக்காட்டுப்பட்டி சுஜித் சம்பவம்) அவரிடம் சொல்லிவிட்டோம்..

கலெக்டர்:  எல்லாம் ஓகே. உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்துச்சுனா... நேரா போய்  பிடிஓகிட்ட முதல்ல சொல்லுங்க. நான் அவர கூப்பிட்டு சொல்றேன்...

ச.ஆ: அவ்வளவு அக்கறை இருந்தாவா சார்!.

கலெக்டர்:  ஆமா உண்மையிலேயே, உங்களுக்கு அக்கறை இருந்தா நேர்ல போய் சொல்லுங்க.  உங்களுக்கு என்ன சரவண பவன் சர்வர்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா  கலெக்டரலாம்... போன்ல எல்லாம் கூப்பிட்டு சொல்றீங்க... ப்ளடி ராஸ்கல்.. போனை வை... இவ்வாறு உரையாடல் நடந்தது.

ஆழ்துளை கிணறு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில், ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருப்பது பற்றி தகவல் சொன்ன ஒருவரை, தரக்குறைவாக வசைபாடிய கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: