தனியார் ஆக்கிரமித்துள்ள நடைபாதையை மீட்டுத்தர கலெக்டரிடம் புகார் மனு

விருதுநகர்: திருவில்லிபுத்தூர் அருகே அருந்ததிய மக்களுக்கு அரசு வழங்கிய நடைபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர்  அருகே நாச்சியார்பட்டி பகுதி அருந்ததிய மக்கள் ஊர்நாட்டமை பெருமாள்  தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில், நாச்சியார்பட்டி  அயன்நாச்சியார்கோவில் காளியம்மன் கோவில் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பாக  அரசு சார்பில் வழங்கப்பட்ட 60 இலவச வீட்டுமனை பட்டாக்களில் 150  குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பட்டாவுக்கான நடைபாதையாக 6 அடி நிலம்  அரசு வழங்கியது. நடைபாதையை 25 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். அரசு  வழங்கிய நடைபாதை இடத்தை முத்துக்கிருஷ்ணன் என்பவர் ஆக்கிரமித்து கம்பி வேலி  போட்டுள்ளார். அது தனது இடம் என மிரட்டுகிறார்.

திருவில்லிபுத்தூர்  தாசில்தாரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் தலையிட்டு  நடைபாதையை மீட்டுக் கொடுத்து, ஆக்கிரமித்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். மேலும் அருந்ததிய குடியிருப்பு பகுதியில் நிலவும்  கழிப்பறை, தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: