சுகாதாரத்துறையில் மருந்து தட்டுப்பாடு எதிரொலி 50 லட்சம் மாணவர்களுக்கு இரும்புசத்து மாத்திரை நிறுத்தம்: 4 மாதங்களாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு

சுகாதாரத்துறையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் 50 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு 4 மாதங்களாக இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்படவில்லை. இதனால் தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 58,234 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 1.31 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 45 ஆயிரம் பள்ளிகள் அரசுப்பள்ளிகள்.  மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி,  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர், கிராமப்புற மாணவர்களிடையே  ஊட்டசத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது. சுகாதாரம், நலவாழ்வு திட்டத்தின்கீழ், பள்ளி மாணவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே போல், மொத்தமுள்ள 1.31 கோடி மாணவர்களில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு ஊட்டசத்து குறைபாட்டை சரிசெய்ய ஒவ்வொரு மாணவருக்கும் வியாழக்கிழமை மதிய உணவுக்குபின், ஒரு இரும்பு சத்து மாத்திரை வழங்கப்படுகிறது. அதன்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு மாதத்துக்கான மாத்திரைகள் தமிழக அரசின் மாவட்ட தலைமை மருந்தகங்கள் மூலம் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்துக்கு பின்னர் தமிழகத்தில் பல பள்ளிகளில் இரும்பு சத்து மாத்திரைகள் வினியோகிக்கப்படவில்லை. சென்னையிலுள்ள பள்ளிகளிலும் இதே நிலை தொடர்கிறது. ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக மாவட்ட தலைமை மருந்தகங்களில் கேள்வி எழுப்பியும், மீண்டும் இரும்பு சத்து மாத்திரைகள் னியோகிக்கப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இரும்பு சத்து மாத்திரைகளை பள்ளிகளில் வினியோகிப்பது நிறுத்தப்படவில்லை. அந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. பள்ளிகளுக்கு மாத்திரை அனுப்பப்பட்டு வருகிறது. பள்ளிகளுக்கு மாத்திரை சென்றடையவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வினியோகிக்கப்படுவது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சுகாதாரத்துறை ஊழியர்கள் தவறு செய்தது உறுதிப்படுத்தப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தவறு நடந்திருக்கும்பட்சத்தில், அதுதொடர்பாக பள்ளிகல்வித்துறை இயக்குனரிடம் புகார் அளிக்கப்படும். இவ்வாறு பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: