ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமானது: கவர்னர்கள் பதவியேற்பு

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீர் மாநிலமானது நேற்று அதிகாலை முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசமாக மாறியது. இரு யூனியன் பிரதேச கவர்னர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. இதனைத் தொடர்ந்து அங்கு செல்போன், இன்டர்நெட் முடக்கம், ஊடகங்களுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் அரசியல் கட்சி தலைவர்களும் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறி செயல்படத் தொடங்கின. மாநிலமானது யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாநிலங்களில் எண்ணிக்கை 28ஆக குறைந்துள்ளது. யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கிரீஸ் சந்திர முர்மூ மற்றும் லடாக் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாதூர் ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பெயர் மாற்றம்: காஷ்மீர் மாநிலம் நேற்று முதல் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதனால், ஜம்முவில் இயங்கி வந்த வானொலி நிலையத்தின் பெயர், ‘அகில இந்திய வானொலி- ஜம்மு’ என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், நகர், லேவில் உள்ள வானொலி நிலையங்கள் முறையே, ‘அகில இந்திய வானொலி-நகர், அகில இந்திய வானொலி-லே என பெயர் மாற்றப்பட்டுள்ளன.

கடையடைப்பு

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில் காஷ்மீரில் நேற்று கடையடைப்பு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனியார் கார்கள், சில ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மட்டுமே இயங்கின.

Related Stories: