யார் போராடினாலும் நசுக்க பார்க்கிறார்கள் மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்ப அரசு முயற்சிக்கிறது : திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை: போராடும் மருத்துவர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு முயற்சிக்கிறது என்று திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டினார். திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சுஜித் விவகாரத்தில் ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்தை அதிமுக அரசு அலட்சியம் செய்கிறது. குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கத்தில் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்வி அது, அரசை குறை கூறுவதற்காக அவர் அப்படி கூறவில்லை. எனவே எதிர்கட்சி தலைவரை அலட்சியம் செய்து முதல்வர் பேசியது கண்டனத்திற்குரியது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் மீட்பு நடவடிக்கையில் தமிழக அரசின்  நடவடிக்கை சரியாக நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன். முதல்வர் இந்த விவகாரத்தில் பொறுப்போடு பதில் சொல்லி இருக்க வேண்டும். கடந்த காலங்களில் இப்படி ஆழ்துளை கிணறுகளில் தவறி விழுந்த குழந்தைகளை மீட்க ராணுவ உதவிகளை தமிழக அரசு நாடியுள்ளது. எனவே, அரசு ராணுவத்தை அழைத்திருக்க வேண்டும்.

பேரிடர் மேலாண்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் சம்பவ இடத்திற்கே சென்றார். அரசு திட்டங்களை சரியாக இயற்றி இருந்தால், குழந்தை மீட்பில் வெற்றி பெற்று இருக்கலாம். திமுக ஆட்சியில் ஆண்டிப்பட்டியில் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. இந்த மீட்பு நடவடிக்கையின் போது ராணுவம் வந்து முயற்சி செய்தது. அப்படி இருக்கையில் சுஜித்தை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை என்பது தான் பிரச்னை. மருத்துவர்கள் போராட்டத்தில் அரசு தலையிட்டு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் இதுபோன்று மருத்துவர்கள் பிரச்னை இருந்துள்ளது. மருத்துவர்களை அரசு அலட்சியம் செய்கிறதே ஒழிய, அவர்களை அழைத்து பேசி உரிய தீர்வு எடுத்திருக்க வேண்டும்.போராட்டத்தில் பங்கேற்காத மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு போராட்டத்தை கைவிட சொல்கிறது. இது மட்டுமல்ல, யார் போராடினாலும் அவர்களை இந்த அரசு நசுக்கத்தான் பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: