காரைக்குடியில் கண்மாயில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு: நரிக்குறவர்கள் இயந்திரங்களைச் சிறைபிடித்து போராட்டம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்மாயில் மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் இயந்திரங்களைச் சிறைபிடித்தனர். காரைக்குடி அருகே சங்கராபுரம் வேடன் நகரில் 80 நரிக்குறவர் குடும்பங்கள் உள்ளன. ஊராட்சி சார்பில் அப்பகுதிக்குத் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். அப்பகுதியையொட்டி 116 ஏக்கரில் சங்கு சமுத்திரக் கண்மாய் உள்ளது. இக்கண்மாய் அப்பகுதியில் முக்கிய நீராதாரமாக உள்ளது.

இந்நிலையில் அந்த கண்மாயைத் தூர்வாரி 0.90 மீட்டர் ஆழத்திற்கு 6,750 கன மீட்டர் கிராவல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் வேடன் நகரையொட்டி மண் அள்ளுவதால் குடியிருப்புப் பகுதியைப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மண் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நரிக்குறவர்கள் இயந்திரங்களைச் சிறைபிடித்துள்ளனர்.

அவர்களிடம் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மண் அள்ளும் பணி நிறுத்தப்பட்டது. நரிக்குறவர்கள் கூறுகையில், கண்மாயில் மண் அள்ளுவதால் மாபெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் எங்களது குழந்தைகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் மண் அள்ளும் பணியை நிறுத்த வேண்டும் என  கூறினார்.

Related Stories: