இன்று (அக்.29) கவிஞர் வாலியின் 88வது பிறந்தநாள் ‘வாலி’பக்கவிஞர் வாழியவே....!

எந்த ஒரு படைப்பாக இருந்தாலும், அது எக்காலத்திலும் எந்த தலைமுறையிலும் சென்று சேர வேண்டும். அப்படி தனது எழுத்துத்திறமையால் பல அற்புதமான பாடல்கள், நூல்களை எழுதி அசத்தியவர்தான் கவிஞர் வாலி. அதனால்தான் அவரால் எம்ஜிஆருக்கும், தனுஷ்க்கும் கூட பாடல் எழுத முடிந்தது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் அக்.29, 1931ம் ஆண்டு ஸ்ரீனிவாசன் - பொன்னம்மாள் தம்பதி மகனாக பிறந்தவர் ரங்கராஜன். அவர்தான் பின்னாளில் வாலி ஆனார்.

சிறுவயதில் இவருக்கு ஓவியத்தின் மீதே நாட்டமிருந்தது. பின்னர் தன்னை ஒரு கவிஞராகவும் வெளிப்படுத்திக் கொண்டார்.

சென்னை ஓவியக்கல்லூரியில் ஓவியக்கலை படிப்பை முடித்தவர், பின்னர் நண்பர்களுடன் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். தொடர்ந்து திருச்சி வானொலிக்கு நாடகம், கதை எழுதிக் கொடுக்க துவங்கினார். இப்படியே பயணப்பட்ட அவரது எழுத்து வாழ்க்கை, ஒரு நாள் கோடம்பாக்கத்தின் கதவையும் தட்டியது. பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மூலம் சினிமாவிற்கு பாட்டெழுத  வந்தார் வாலி. 1958ம் ஆண்டு ‘அழகர் மலைக்கள்ளன்’ என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். பின்னர் பல பாடல்கள் எழுதினாலும், 1963ம் ஆண்டு ‘கற்பகம்’ திரைப்படத்தில் அவர் எழுதிய ‘அத்தை மடி மெத்தையடி’, ‘மன்னவனே அழலாமா’ போன்ற பாடல்கள் வாலிக்கு வசந்த வாசலை திறந்து வைத்தன.

தொடர்ந்து எம்ஜிஆருக்கு பல பாடல்களை எழுதினார். எதுகை மோனையுடன், யதார்த்தை வாழ்க்கையையும் தொட்டு எழுதுவது அவருக்கு பிடித்தமான பாணி. உதாரணமாக, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’ என்ற பாடல் ஒன்றே அவரது திறமையை உலகிற்கு பறை சாற்றும். ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்றும் எழுதுவார். ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்’ என்று ஆன்மிக பாடலையும் எழுதி அசத்துவார். ‘நம் காதலுக்கு டியூட்டர்... நீதான் சாப்ட்வேர்’ என கரண்ட் மேட்டரையும் கை வைப்பார். அதுதான் வாலி.

திரையிசையை பொறுத்தவரை ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, பலரது மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். இவர் எழுதிய ‘அம்மா என்றழைக்காத’ பாடல், கோயில் கல்வெட்டில் இடம் பிடித்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்ல... ‘சின்னத்தாயவள் தந்த ராசாவே’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே’, ‘நானாக நானில்லை தாயே’ என அவர் எழுதிய தாய்ப்பாடல்கள் மிக பிரபலம்.

இவர் பாடல் எழுத வந்த காலத்தில் கவிஞர் கண்ணதாசன் மிகப்பிரபலமாக இருந்தார். ஆரம்பத்தில் வாலி எழுதிய பல பாடல்கள் கண்ணதாசன் எழுதியதாகவே ரசிகர்கள் சிலர் கருதினர். இருப்பினும், வாலி மீதும், அவரது வரிகள் மீதும் மிகுந்த மரியாதையை கண்ணதாசன் வைத்திருந்தார்.

அவரது இறப்பின்போது கவிஞர் வாலி எழுதிய அற்புத வரிகள் இவை...!

“எழுதப் படிக்கத் தெரியாத

எத்தனையோ பேர்களில்

எமனும் ஒருவன்.

ஒரு அழகியகவிதைப்

புத்தகத்தைக் கிழித்துப்

போட்டுவிட்டான்.”

- இப்படி யதார்த்தமாக எழுதுவதில் வல்லவர்.  பாடல்கள் மட்டுமல்ல... ‘அவதாரப் புருஷன்’, ‘அம்மா’, ‘பொய்க்கால் குதிரைகள்’, ‘ராமானுஜ காவியம்’, ‘நிஜ கோவிந்தம்’, ‘கலைஞர் காவியம்’, ‘பாண்டவர் பூமி’, ‘கிருஷ்ண விஜயம்’, ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். திரைக்கதை, வசனம் மற்றும் ஒரு சில படங்களில் நடிகராகவும் தலை காட்டி உள்ளார். இவரது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2007ல் மத்திய அரசு, வாலிக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது. ‘இந்திய நாடு என் வீடு’ என்ற பாடலுக்காக தேசிய விருது மற்றும் மாநில விருதுகளையம் பெற்றுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும், எழுத்துப்பணியை விடாமல் செய்து வந்தார். இதனால் ‘எழுத்துலக மார்க்கண்டேயன்’ என ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்தனர்.

Related Stories: