கோவையில் தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் கருத்தடை மையம் விரைவில் திறப்பு

கோவை: கோவை மாநகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஒண்டிப்புதூரில் தெருநாய் கருத்தடை மையம் கட்டுமானப் பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் நடத்திய கணக்கெடுப்பின்படி மாநகரில் 70,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இவற்றை கட்டுப்படுத்த சீரநாயக்கன்பாளையத்தில் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மாநகரிலுள்ள தெருநாய்களை பிடித்து இங்கு கருத்தடை செய்யப்பட்டு பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்ப விடப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு உக்கடத்திலும் தெருநாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு சீரநாயக்கன் பாளையம் மையத்திலும் மற்ற 4 மண்டலங்களில் பிடிக்கப்படும் நாய்களுக்கு உக்கடம் மையத்திலும் கருத்தடை செய்யப்பட்டது. இம்மையங்களில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் மூலம் தினசரி 100 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுவருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு காரணங்களால் உக்கடத்திலுள்ள கருத்தடை அறுவை மையம் மூடப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்தது. இதுதொடர்பாக சமூகஆர்வலர் ஆவாரம்பாளையம் ராஜ்குமார் கூறும்போது, கடந்த ஆண்டு நாய்க்கடி பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் ஏறத்தாழ 628 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். ரேபிஸ் நோயின் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்டோர் இதுவரை நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். மாநகரில் தற்போது லட்சத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தெருநாய்கள் உள்ளன.

ஒவ்வொரு வீதியிலும் குறைந்தது 4 தெருநாய்கள் உள்ளன. இவை இரவு நேரங்களில் நடந்து செல்வோரையும், வாகனங்களில் செல்வோரையும் விரட்டி கடிக்கின்றன. திடீரென சாலைகளின் குறுக்கே பாய்ந்து வாகன ஓட்டுநர்களுக்கு விபத்தை ஏற்படுத்துகின்றன. மாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி கூறும்போது, ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே 50 சென்ட் பரப்பளவில் ரூ.36 லட்சம் மதிப்பில் தெருநாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் அறை, அறுவை சிகிச்சை அறை, தெருநாய்களை அடைத்து வைக்க 9 கூண்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன.

இம்மையத்தின் கட்டுமானப் பணி 60 சதவீதம் முடிந்து விட்டது. 3 வாரங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ஒப்பந்தம் மூலம் தகுந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணி மீண்டும் தொடங்கப்படும் என கூறினார். ஒரு தெருநாய்க்கு கருத்தடை அறுவை செய்தால் அரசு நிர்ணயித்த தொகை ரூ.444 தனியாருக்கு வழங்கப்படும். சீரநாயக்கன்பாளையம் மையத்தில் தற்போது மேற்கு மண்டலத்துக்குட்பட்ட தெருநாய்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. அவர்களிடம் கூடுதலாக ஒரு மண்டலம் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 3 மண்டலங்களில் சுற்றும் தெருநாய்களை ஒண்டிப்புதூர் கருத்தடை மையத்தில் ஒப்படைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories:

>