கர்தார்பூர் பாதை திறப்பு விழா பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார் மன்மோகன்?: இருவேறு கருத்துக்களால் குழப்பம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரியவந்துள்ளது. பஞ்சாபின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர் வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில் ஒப்புக் கொண்டன. அதன்படி, இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. வருகிற 9ம் தேதி இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து முல்தான் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமத் குரேசி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில்,” கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்கிறார். நாள்தோறும் சுமார் 5000 இந்திய பக்தர்கள் இதன் மூலம் சீக்கிய குருத்வாராவை பார்வையிடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் விடுத்த அழைப்பை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் விழாவில் பங்கேற்கிறார். சிறப்பு விருந்தினராக அல்ல சாதாரண மனிதராக இந்த விழாவில் திட்டமிட்டப்படி கலந்து கொள்வார்” என்று கூறியதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு இருந்தன.

ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், ‘திறப்பு விழாவில் நான் பங்கேற்க மாட்டேன். ஆனால், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை சாதாரண பக்தராக வந்து பார்வையிடுவேன்,’ என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான சீக்கிய ஜதா பிரதிநிதிகள் குழுவில் மன்மோகன் சிங்கும் இடம்பெறுவார் என்றும், அவர் குருத்வாராவை பார்வையிட்ட பின்னர் அன்றே திரும்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Related Stories:

>