தீபாவளிக்கு முன் இரு நாட்கள் அதிகாலை 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: தீபாவளிக்கு மதுரை மாவட்டத்தில் இரவு 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களும் அதாவது 25, 26 ஆகிய நாட்களில் மதுரை மாவட்டத்தில் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மதுரை டெக்ஸ்டைல்ஸ் விற்பனையார் கூட்டமைப்பின் செயலர் அஸ்வத் யூசப் என்பவர் மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில்  இந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஏராளமான வியாபாரிகள் வட்டிக்கு கடன் பெற்று, ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்வர். மதுரை தூங்காநகரம் என்பதாலும், தீபாவளிக்கு முந்தையவை வெள்ளி, சனி கிழமைகள் என்பதாலும் கூலி தொழிலாளர்கள் பிற மாவட்டங்களில் பணியாற்றுவோர் என பலரும் மதுரைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்வர்.

குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரைக்கு வந்தே பொருட்களை வாங்கி செல்வர். ஆதலால் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு முந்தைய இரு நாட்களும் மதுரை மாவட்டத்தில் இரவு முழுவதும் கடைகளை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் அதிகாலை 2 மணி வரை கடைகளை நடத்தி கொள்ள அனுமதியளித்தார். அதே சமயம் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு, ஷிப்ட் நேரங்கள் அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், காவல்துறையினரும் இது தொடர்பாக வரம்புகளை வகுத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: