ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும்: பிரதமர் மோடி சாடல்

பீட்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசிய லமைப்பு சட்டம் 370வது பிரிவு நீக்கத்தை கேலி செய்தவர்களை வரலாறு கவனித்துக் கொள்ளும். அவர்களை தண்டிக்க மகாராஷ்டிரா மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி  எதிர்க்கட்சிகளை சாடினார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 21ம் ேததி தேர்தல் நடைபெறுகிறது. ேதர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படுகிறது. பாஜ, சிவசேனா, காங்கிரஸ் மற்றும்  ேதசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று பீட் மாவட்டம் பார்லி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து  கொண்டார்.

இந்த தொகுதியில் பாஜ சார்பில் மாநில அமைச்சர் பங்கஜா முண்டே போட்டியிடுகிறார். பங்கஜா முண்டேவை எதிர்த்து அவருடைய ஒன்றுவிட்ட சகோதரரும் சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவருமான தனஞ்சய் முண்டே போட்டியிடுகிறார்.  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மகாராஷ்டிராவில் நடைபெறும் இந்த ேதர்தல் பாஜ.வின் வளர்ச்சி கொள்கைக்கும் எதிர்க்கட்சிகளின் சுயநலத்துக்கும் நடக்கும் போர் ஆகும். நான் உங்களையும் உங்களுடைய தேச பக்தியையும்  நம்புகிறேன். நாட்டின் நலனுக்கு எதிராக இருப்பவர்களுக்கு நீங்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்ட வேண்டும். ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்டதை கேலி செய்தவர்களை வரலாறு கவனிக்கும். காஷ்மீரில் இந்து மக்கள் அதிகமாக  இருந்திருந்தால் 370வது பிரிவை நீக்க முடிவெடுத்து இருப்பார்களா என்று சில காங்கிரஸ் தலைவர்கள் கேட்கிறார்கள்.

தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது இந்து, முஸ்லிம் என்று நீங்கள் சிந்திப்பது சரியா? என்று கேட்கிறேன். 370வது பிரிவை நீக்கியது ஒருவரை கொலை செய்வது போன்றது என்றும், இந்திய-பாகிஸ்தான் பிரச்னை உள்நாட்டு விவகாரம்  அல்ல என்றும், 370வது பிரிவை நீக்கியது நாட்டுக்கு பேரழிவு என்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சியை தண்டிக்க தேசம் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது. அந்த வாய்ப்பு மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது. மக்கள்  பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி இப்போது தொடங்கி இருக்கிறது. தாமரை சின்னம் பீட் மாவட்டத்தில் எப்போதும் மலர்ந்திருக்கும் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் வெளியாகும்  தேர்தல் முடிவுகள் அனைத்து வரலாற்று சாதனைகளையும் முறியடிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: