ஆட்டிஸம் குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளி!

“எல்லாக் குழந்தைகளும் திறமைசாலிகள் தான். ஆனால் நாம் அவர்களின் திறமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மதிப்பெண்களை கொண்டு மட்டுமே தான் அவர்களை நாம் எடைப் போடுகிறோம். சாதாரண குழந்தைகளுக்கே இந்த நிலை என்றால், கற்றல் குறைபாடு, ஆட்டிசம் மற்றும் மைல்ட் எம்.ஆர் குழந்தைகளின் நிலை பற்றி விவரிக்க தேவையில்லை என்கிறார்கள் அகிலா மற்றும் ஹேமலதா. தோழிகளான இவர்கள் இது போன்ற சிறப்பு குழந்தைகளுக்காகவே ‘ஆர்கேடியா என்.ஐ.ஓ.எஸ்’ என்ற சிறப்பு பள்ளிகளை துவங்கி அதன் மூலம் அவர்களுக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை அமைத்து வருகின்றனர்.

Advertising
Advertising

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்’’ என்று பேச துவங்கினார் அகிலா. படிப்பு முடிச்ச கையோடு எனக்கு திருமணமானது. என் கணவருக்கு பெங்களூரில் வேலை என்பதால், நான் அங்க போய் செட்டிலாயிட்டேன். அதன் பிறகு குழந்தை குடும்பம்ன்னு வாழ்க்கை நகர ஆரம்பிச்சது. என் குழந்தைக்கு மூன்று வயதான பிறகு ஏதாவது வேலைக்கு போகலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டது. எங்க வீட்டுக்கு அருகே உள்ள பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக வேலைப் பார்த்தேன். அப்படித்தான் என்னுடைய பயணம் துவங்கியது. நான் வேலைக்கு சேர்ந்த பள்ளி சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி. அங்க போன பிறகு தான் இப்படியும் குழந்தைகள் இருக்காங்க. அவங்களுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்தது’’ என்றவர் அதன் பிறகு சிறப்பு குழந்தைளின் பிரச்னைகள் என்ன அவர்களின் நடவடிக்கை என அனைத்து பற்றிய விவரங்களை தெரிந்துக் கொண்டுள்ளார்.

‘‘இதற்கிடையில் என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலானது. நாங்களும் சென்னைக்கே வந்து செட்டிலாயிட்டோம். ஏற்கனவே பெங்களூரில் சிறப்பு பள்ளியில் வேலைப் பார்த்து வந்ததால், இங்கும் எனக்கு ஒரு சிறப்பு பள்ளியில் வேலைக்கான வாய்ப்பு கிடைச்சது. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு பள்ளியில் 15 வருஷம் வேலை செய்தேன். அங்கு இருக்கும் போது சிறப்பு குழந்தைகளுக்கான ஆசிரியர் பயிற்சியிலும் பி.எட் பட்டமும் பெற்றேன். இதன் மூலம் இந்த குழந்தைகள் பற்றி முழுமையா தெரிந்துக் கொண்டேன். அங்கு தான் எனக்கு ஹேமலதாவின் அறிமுகம் கிடைச்சது. அவங்களும் என்னை போல் அங்கு ஆசிரியரா தான் வேலைப் பார்த்து வந்தாங்க. என்னதான் 15 வருஷமா வேலைப் பார்த்தாலும், எனக்கும் ஹேமாவுக்கும் இதே போல் ஒரு சிறப்பு பள்ளியினை மாணவர்கள் பயன்படி நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது’’ என்றவரைத் தொடர்ந்தார் ஹேமலதா.

‘‘அகிலா பள்ளியில் சேர்ந்த நாளில் இருந்தே எனக்கும் அவருக்கும் ஒரே கருத்து இருப்பது தெரிய வந்தது. அதற்கு காரணம் இது போன்ற பள்ளிகள் இயங்கி வந்தாலும், இதில் பயிலும் எல்லா மாணவர்களாலும் எதிர்காலத்தில் தனக்கான ஒரு நிலையை அடையமுடியாமல் தான் இருந்து வருகின்றனர். காரணம் பள்ளி என்று இயக்கும் போது, அதில் அந்த குழந்தைகளுக்கு ஓரளவு தான் பயிற்சி அளிக்க முடியும். ஆனால் நாங்க இங்க இருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினோம். நம் மனதில் ஆயிரம் தோன்றும். அதை எல்லாம் நாம் வேறு ஒரு இடத்தில் செயல்படுத்த முடியாது. அந்த சமயத்தில் தான் இந்த குழந்தைகளுக்கான ஒரு பள்ளியினை துவங்கினால் என்ன என்று எனக்கு தோன்றியது. என் விருப்பத்தை அகிலாவிடம் சொன்ன போது அவரும் சம்மதம் தெரிவிக்க கடந்த ஆண்டு இனிதே எங்கள் பள்ளி செயல்பட ஆரம்பிச்சது’’ என்றவரை தொடர்ந்த அகிலா பள்ளியின் செயல்பாட்டினை பற்றி விவரித்தார்.

‘‘ஹேமா 20 வருஷமா டியூஷன் சென்டர் ஒன்றை நிர்வகித்து வராங்க. டியுஷன் மாலை நேரத்தில் மட்டுமே இயங்குவதால், காலையில் அந்த இடம் சும்மா தான் இருக்கும். அதை நாங்க எங்க பள்ளிக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்ன்னு முடிவு செய்தோம். இங்கு கற்றல் குறைப்பாடு, ஆட்டிஸம், மைல்ட் எம்.ஆர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் உள்ள குழந்தைகளும் படிக்கிறாங்க. கற்றல் குறைப்பாடு உள்ள குழந்தைகள் படிப்பதில் கொஞ்சம் மந்தமா இருப்பாங்க. அவங்கள ஸ்லோ லேர்னர்ஸ்ன்னு சொல்வாங்க. ஒரு விடை அவங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லித் தரணும். அப்பத்தான் அவங்க மனசில் பதியும். ஆட்டிசம், மூளையில் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குறைப்பாடு. இது நோயல்ல. குறைப்பாடு என்பதால், கொஞ்சம் இந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்தினால் அவர்களும் மற்ற குழந்தைகள் போல் திறமைசாலியாக மாற்றலாம்.

மைல்டு எம்.ஆர் என்பது லேசான மனநல குறைபாடு. அதாவது அவர்களின் அறிவுத்திறன் மற்ற குழந்தைகளை விட மிகவும் குறைவாக இருக்கும். சில குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டு இருப்பார்கள். அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற வேண்டும் என்பதால், இவர்களால் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் போகும். அதே சமயம் இவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இவர்களுக்கு மற்ற குழந்தைகள் போல் எந்த பிரச்னையும் இருக்காது. விளையாட்டு காரணமாக தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியாமல் இருக்கும் பட்சத்தில் இவர்கள் இங்கு பயிற்சி பெற்று +2 வரை தேர்வு செய்ய நாங்க உதவுறோம்’’ என்றவர் இங்கு பயன்படுத்தும் கல்வி முறையினை பற்றி விவரித்தார்.

‘‘நாங்க என்.ஐ.ஓ.எஸ் பாடத்திட்டத்தினை தான் பின்பற்றி வருகிறோம். இங்கு பயிலும் குழந்தைகள் அனைவரும் 10ம் வகுப்பு மட்டும் இல்லாமல் +2 தேர்விலும் தேர்ச்சி பெற செய்கிறோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கிறோம். ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமிக்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொருவர் மீதும் அதிக கவனம் செலுத்த முடிகிறது. காரணம் இந்த குழந்தைகளுக்கு ஒரு முறை சொன்னால் உடனே புரியாது. திரும்ப திரும்ப சொல்லித் தரணும். ஒரு கணக்கையே பகுதி பகுதியாக பிரிச்சு கொடுத்தால் தான் அவங்களுக்கு புரியும். அது மட்டும் இல்லை அதே போன்ற கணக்கினை 15 தடவை திரும்ப திரும்ப போட்டால் தான் அவர்கள் மனதில் பதியும்.

அதே போல் ஸ்பெல்லிங் எழுதும் போது நிறைய தவறு செய்வாங்க. ஒவ்வொரு கேள்வியிலும் இருக்கும் கடினமான வார்த்தைகளை பொறுமையா சொல்லித் தந்து பல முறை எழுத வைக்கணும்’’. என்.ஐ.ஓ.எஸ், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஓபன் ஸ்கூல் சிலபஸ் முறையில் எழுதப்படும் தேர்வு. 14 வயதுள்ளவர்கள் 10ம் வகுப்பும், 16 வயதுள்ளவர்கள் +2 தேர்வை எழுதலாம். இதில் கணக்கு, அறிவியல் மட்டும் இல்லாமல் சைக்காலஜி, சோஷியாலஜி, ஆர்ட, பெயின்டிங்...ன்னு நிறைய இருக்கு. அதை அவர்கள் திறமைக்கு ஏற்ப தேர்வு செய்யலாம். மேலும் ஒரு முறை இரண்டு பாடங்கள் என ஆறு மாதம் ஒரு முறை என தேர்வு எழுது தேர்ச்சி பெறலாம். அதாவது பத்தாம் வகுப்பை மட்டுமே இவங்க 5 வருஷம் வரை படிக்கலாம். அப்படித்தான் இந்த குழந்தைகளை தேர்ச்சி பெற வைக்கிறோம்.

எங்களிடம் படிச்ச பசங்க இப்ப கல்லூரி அல்லது ஐ.டி மற்றும் டிப்ளமா படிச்சிட்டு நல்ல நிலையில் உள்ளனர்’’ என்றவரை தொடர்ந்த ஹேமா குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் பற்றி விவரித்தார். ‘‘இங்குள்ள குழந்தைகள் எல்லாரும் ஒரே மாதிரி செயல்படமாட்டாங்க. ஆட்டிசம் குழந்ததைளுக்கு சோஷியல் இன்ட்ராக்ஷன் இருக்காது. மைல்ட் எம்.ஆர் குழந்தைகளுக்கு நாம என்ன சொல்றோம்ன்னே புரியாது. இவங்கள படிக்க சொன்னா எழுத்து கூட்டி படிக்கமாட்டாங்க. ஆனால் பாட்டு ரொம்ப பிடிக்கும். அதனால பாடத்தினை பாடல் மூலமா அவங்களுக்கு சொல்லித் தருவோம். அந்த பாடத்திட்டம் பொருத்தவரை இப்படித்தான் சொல்லித்தரணும்ன்னு வழிமுறை எல்லாம் கிடையாது.

அவங்களுக்கு புரிய வைக்க எந்த விதமான முறையினையும் கையாலலாம். அடிப்படை புரிஞ்சிடுச்சுன்னா அதன் பிறகு அவங்களே படிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்படித்தான் நாங்க அவங்கள கல்லூரியில் தானே படிக்கும் அளவுக்கு பயிற்சி கொடுத்திடுவோம். ஆறு பேருடன் இந்த பள்ளியினை துவங்கினோம். இப்போது 33 மாணவர்கள் இருக்காங்க. எங்களின் எண்ணம் பணம் சம்பாதிப்பதில்லை. எங்களின் பள்ளி நிர்வகிக்க போதமான வருமானம் வந்தால் போதும். தற்போது எங்களின் அடுத்த கட்டம் சாதாரண பள்ளி ஒன்றை துவங்க வேண்டும் என்பது தான். அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம். கூடியவிரைவில் அதுவும் செயல்பட ஆரம்பிக்கும்’’ என்றனர் நம்பிக்கையோடு தோழிகளான ஹேமலதா, அகிலா.

 

தொகுப்பு: ஷம்ரிதி

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: