பேஸ்புக் பழக்கத்தால் விபரீதம் தொழிலதிபரை மயக்கி 45 லட்சம் சுருட்டிய பெண்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் எர்ணாகுளம் அருகே பேஸ்புக்கில் பழக்கத்தை ஏற்படுத்தி  தொழிலதிபரிடம் 45 லட்சம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார்  அதிரடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.கேரள மாநிலம்  எர்ணாகுளம்  அருகே உள்ள பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் வினில் (38, பெயர்  மாற்றப்பட்டுள்ளது).  தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு  முன்பு இவருக்கு  பேஸ்புக் மூலம் ஒரு இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி  பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்தனர். இதையடுத்து அந்த  இளம்பெண் தனது போட்டோக்களை அவருக்கு அனுப்பினார். வினிலும் ஏராளமான  போட்டோக்களை அவருக்கு அனுப்பினார். இதையடுத்து இவர்கள் இடையே நெருக்கம்  அதிகமானது.  இந்த நிலையில் வினிலை தொடர்புக் கொண்ட இளம்பெண், தனக்கு 45 லட்சம்   தராவிட்டால் நமது பேஸ்புக்கில் உள்ள நெருக்கத்தை உங்கள் குடும்பத்தில் உள்ள   அனைவருக்கும் தெரிவிப்பேன் என்று கூறினார். இதைகேட்டு பயந்த வினில்  அந்த பெண் கேட்ட 45 லட்சம்  பணத்தை அனுப்பினார்.

இந்த நிலையில்  மீண்டும் அந்த இளம்பெண் பணம் கேட்டு மிரட்டினார். இதையடுத்து வினில்  பெரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் வினிலை ஏமாற்றியது எர்ணாகுளம்   வைட்டிலபாறை பகுதியைச் சேர்ந்த சீமா (35) என்பதும், அவருக்கு சேராநல்லூர்  பகுதியைச்  சேர்ந்த ஷாஹின் (34) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. அதைத்  தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் மேலும்  சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதேபோல் முக்கிய   பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பலர் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என்று  பயந்து போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர். இதை பயன்படுத்தி இந்த  கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Related Stories: