சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

அகோலா: ‘‘வீர சாவர்க்கருக்கு கடந்த ஆட்சியில் பாரத ரத்னா விருது வழங்க மறுக்கப்பட்டது,’’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, பாஜ.வின் தேர்தல் அறிக்கை  வெளியிடப்பட்டது. இதில், சுதந்திர போராட்ட தியாகியான இந்துத்துவாவாதி வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிராவின் அகோலாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சாவர்க்கர் குறித்து பேசியதாவது:

வீர சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் மறுக்கப்பட்டது. பாஜ அவருக்கு இந்த விருதை வழங்குவதற்கு பரிந்துரைக்கப்படும் என கூறியுள்ளது, நாட்டை கட்டி எழுப்புவதற்காக சாவர்க்கர் ஆற்றிய சேவையின் அடிப்படையில்தான் அவரது மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து எதிர்கட்சிகள் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பேசுவது வெட்கக்கேடானது. அவர்கள் எப்படி 370 சட்டப்பிரிவு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கும் என்ன தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கடைசி காலத்தில் காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள பார்டூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘காங்கிரஸ் கட்சி சுதந்திரத்துக்காக போராடிய அதே கட்சி அல்ல. அந்த கட்சி தனது கடைசி கால கட்டத்தில் உள்ளது. அது குடும்ப அரசியலில்தான் நாட்டுப்பற்றை காண்கிறது,” என்றார்.

Related Stories: