கொடைக்கானலில் கொட்டுது மழை எலிவால் அருவியை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்: களை கட்டுகிறது ‘ஆப்-சீசன்’

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. எலிவால் அருவியை கண்டு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்தனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்ேபாது ‘ஆப்-சீசன்’ களை கட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த வார தொடர் விடுமுறை தற்போது வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இவர்கள் பிரையண்ட் பார்க், கோக்கர்ஸ் வாக், தூண் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர்.

கொடைக்கானலில் நிலவும் இதமான குளிர், மேக மூட்டம் காரணமாக நேற்று தூண்பாறையைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பல மணி நேரம்  காத்திருந்து ரசித்தனர். ‘க்ரீன் வேலி வியூ’ எனப்படும் தற்கொலை முனை பகுதியிலும் மேகமூட்டம் இருந்தது. ஆனால் குணா குகை, பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் மேகமூட்டம் குறைவாக இருந்தது. பகல் நேரத்தில் வெயில் குறைவாகவும், மாலை மற்றும் இரவு நேரங்களிலும் இதமான குளிர் நிலவி வருகிறது. இந்த மாறுபட்ட சூழலை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். குறிப்பாக, கேரளாவில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர் மழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மேலும், பசுமையான சூழலில் காணப்படும் எலிவால் அருவியையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.

Related Stories: