நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு சென்னை மாணவி தாயுடன் கைது: தந்தை மாயம்: 3 பேரிடம் சிபிசிஐடி கிடுக்குப்பிடி

தேனி:  நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆள் மாறாட்டம் செய்ததாக சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பிரவீன், ராகுல் ஆகியோரும், இவர்களது தந்தை சரவணன், டேவிட் ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதுதவிர வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பான், அவரின் தந்தை முகமது சபி ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக நேற்று ஒரு மாணவி சிக்கியுள்ளார். சென்னை அருகே தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக்கல்லூரியில் பயிலும் தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்காவை, சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். விசாரணையை தொடர்ந்து மாணவி பிரியங்கா மற்றும் இவரது தாயார் மைனாவதி ஆகியோரை, சிபிசிஐடி போலீசார் நேற்று அதிகாலை 3 மணிக்கு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வந்தனர். அப்போது மாணவி பிரியங்கா அழும் சப்தம் கேட்டது. இதனைக்கேட்டதும் செய்தியாளர்கள் அலுவலகம் முன்பு திரண்டனர். உடனே போலீசார் அலுவலகத்தின் அனைத்து ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டனர். பின்னர் காலை முதல் பகல் 1 மணி வரை தொடர்ந்து போலீசார், பிரியங்கா, மைனாவதி ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை நடத்தினர்.

அப்போது மைனாவதி நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தாய், மகள் இருவரையும் சிபிசிஐடி போலீசார் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனைக்கு பிறகு மீண்டும் இருவரையும், மதியம் 3.30 மணியளவில் தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் கைது செய்து தேனி குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் தாமோதரன், கண்காணிப்பாளர் பொன்னம்பல நமச்சிவாயம் மற்றும் ஒரு பெண் ஊழியர் என மூவர், தேனி சிபிசிஐடி அலுவலகம் வந்தனர். இவர்களிடமும் போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.  மாணவி பிரியங்காவின் தந்தை அர்ச்சுனன் சென்னையில் பிரபல வக்கீலாக உள்ளார். தகவலறிந்து இவர் மாயமானதாக கூறப்படுகிறது. இவரையும் சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: