‘தாதா’ போட்டியில் காஞ்சிபுரத்தில் பயங்கரம் ரவுடி ஸ்ரீதரின் தம்பி வெட்டி கொலை

சென்னை: ‘தாதா’ போட்டியில் காஞ்சிபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதரின் தம்பி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனின் 2வது தம்பி கருணா (எ) கருணாகரன் (32). காஞ்சிபுரம் வணிகர் வீதியில் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை பைனான்ஸ் அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அங்கு, கருணாகரன் இருந்துள்ளார். மாலை 6 மணியளவில் 5 பைக்குகளில் 10 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைனான்ஸ் அலுவலகத்துக்கு வந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், பெட்ரோல் குண்டு வீசினர். இதனால் அலுவலகத்துக்குள் புகை மூட்டம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அந்த கும்பல், பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்த கருணாகரன், அங்கிருந்த விக்கி (எ) விக்னேஷ் ஆகியோரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விக்கி படுகாயமடைந்தார்.

Advertising
Advertising

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சிவகாஞ்சி போலீசார் கருணாகரன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த விக்னேஷை சிகிச்சைக்காகவும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு விக்னேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்ட கருணாகரன் காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக  வலம் வந்த ஸ்ரீதரின் சித்தப்பா மகன் ஆவார். வெங்கடேசன் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 12வது வார்டு வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட தினேஷ் என்பவருக்கு ஆதரவாக சந்திரசேகரன் என்பவர் தேர்தலில் வேலை பார்த்துள்ளார். இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி தினேஷ் மீது, வையாவூர் சாலையில் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயன்றபோது, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர், பிரபல ரவுடியாக காஞ்சிபுரத்தை கதிகலங்க வைத்த ஸ்ரீதரின் இடத்தை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் ஸ்ரீதரின் உறவினர்கள் இடையே அதிகாரப் போட்டி நடந்துள்ளது. இதற்கிடையே, கருணாகரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடப்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: