ஆதித்யா தாக்கரேயை எதிர்த்து மராத்தி ‘பிக் பாஸ்’ புகழ் அபிஜித் பிச்சுகாலே போட்டி

மும்பை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனும் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஆதித்யா தாக்கரே தென் மும்பை, ஒர்லி தொகுதியில் போட்டியிடுவதையடுத்து அந்த தொகுதி ஒரு ‘விஐபி’ தொகுதியாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஆதித்யா தாக்கரேயை எதிர்த்து மராத்தி ‘பிக் பாஸ்’ புகழ் அபிஜித் பிச்சுகாலே போட்டியிடுவது இந்த தொகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அபிஜித் பிச்சுகாலே போட்டியிடுவதால் ஆதித்யா தாக்கரேக்கு கிடைக்கும் வாக்குகளில் எந்த மாற்றத்தையும் அது ஏற்படுத்தி விடாது. ஆனால் ஒர்லி பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குரூப்களுக்கு அவர் புத்துயிர் அளித்துள்ளார்.மராத்தி ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் அபிஜித் பிச்சுகாலே மராத்தி பேசும் மக்களிடையே பிரபலமாகி இருக்கிறார். அவர் இந்த ஷோவில் பங்கேற்றது மட்டுமின்றி ஜனாதிபதி தேர்தல் உட்பட பல தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். எந்தவொரு தேர்தலிலும் அவர் 2,000 வாக்குகளுக்கும் மேல் பெற்றதில்லை.

எனினும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அபிஜித்தை அவர்கள் ‘கவிமனாச்சா நேதா’ என்றழைக்கிறார்கள். ஒர்லி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததற்கான காரணம் குறித்து அபிஜித் பிச்சுகாலேயிடம் கேட்டபோது, “என் தாய் மாமா ஒர்லி ‘பிடிடி’ சாலில்தான் வசித்து வருகிறார். அங்கு எனக்கு தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஒர்லிக்கு நான் மிகவும் பரிச்சயமானவன். நான் ஏற்கனவே சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாரிசான உதயன்ராஜே போசலேயை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். அப்படி இருக்கும்போது, ஆதித்யா தாக்கரேயை எதிர்த்து ஏன் போட்டியிடக்கூடாது? மும்பை நகரம் எனக்கும் சொந்தமானது. அக்டோபர் 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது ஆதித்யா தாக்கரே தோற்கடிக்கப்படுவதை பார்ப்பீர்கள்” என்று அவர் கூறினார்.

Related Stories: