சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா: திருப்பதியில் நாளை தேரோட்டம்

திருமலை: திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்தார். நாளை தேரோட்டம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனங்களில் மலையப்பசுவாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 6ம் நாளான நேற்று மாலை 32 அடி உயர தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் வலம் வந்தார்.

இரவு கஜேந்திர மோட்சத்தில் யானையை காப்பாற்றியதை நினைவு கூறும் வகையிலும் தன்னிடம் சரணடையும் பக்தர்களை சீனிவாச பெருமாள் காப்பாற்றுவதாக தங்க கஜ(யானை) வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

7ம் நாளான இன்று காலை சூரிய பகவானின் பிரதிரூபம் நானே என்பதை விளக்கும் வகையில், சிவப்பு மாலை அணிந்து 7 குதிரை கொண்ட சூரியபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்தார். இன்றிரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது.பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான நாளை காலை தேரோட்டம் நடக்கிறது. இதில்.

அலைபாயும் மனதை சிதறவிடாமல் கட்டுப்படுத்தி சரீரம் என்னும் ரதத்தை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்பசுவாமி தாயார்களுடன் ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

சுவாமியின் தேரோட்டத்தை தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்றிரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பவனி வருவார். நாளை மறுநாள் காலை தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சக்கரத்தாழ்வாருக்கு கோயில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. அன்று மாலை வேத மந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடிஇறக்கப்படுகிறது.

Related Stories: