HDIL நிறுவனத்துக்கு ரூ.4,355 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு: பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் கைது

மும்பை: எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு 4 ஆயிரத்து 355 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்த ஜாய் தாமஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு  நிறுவனமான எச்.டி.ஐ.எல்-லிற்கு கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து எச்.டி.ஐ.எல் நிறுவனத்தின் இயக்குநர்களாக ராகேஷ் மற்றும் சரண் பதாவன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஜாய் தாமசும் கைது செய்யப்பட்டார்.

அவரது நான்கு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எச்.டி.ஐ.எல் அலுவலர்கள் சிலரை விசாரணைக்கு அழைத்து இருப்பதாகவும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் தலைவர் வரியம் சிங் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 2012ம் ஆண்டில் வாரா கடன்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த 44 கணக்குகள் 2017ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்ததாக வங்கி பதிவுகளில் காண்பிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இது தொடர்ப்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, இருநிறுவனங்கள் தொடர்புடைய 6 இடங்களில் சோதனை மேற்கொண்டது.

Related Stories: