பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 திரை பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

முசாபர்பூர்: நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி 49 முக்கிய திரை பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலேயே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். திரைப்பட இயக்குநர் மணிரத்னம், அனுராக் கஷ்யப், ஷியாம் பெனேகல், ராமச்சந்திர குஹா, அபர்னா சென், சௌமித்ரா சாட்டர்ஜி உள்ளிட்டோர் இணைந்து இந்த கடிதத்தை எழுதியிருந்தனர்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் இந்த பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் தாங்கள் எழுதிய கடிதத்தின் மூலம், நாட்டின் பிம்பத்துக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும், பிரதமரின் செயல்பாடுகளை குறைத்து மதிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முசாபர்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், பிரிவினைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கடிதம் அமைந்திருப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி அளித்த உத்தரவின்பேரில் தற்போது கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த பிரபலங்கள் மீது முசாபர்பூரில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது தேசத்துரோகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: