திருப்பதி பிரம்மோற்சவம் 4ம் நாள்: கற்ப விருட்ச வாகனத்தில் வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் மலையப்பசுவாமி வீதிஉலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தில் நான்காம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி கற்ப விருட்ச வாகனத்தில் வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த பச்சை கிளியுடன் கூடிய மாலை ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி சமர்ப்பிக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று மலையப்பசுவாமி கற்ப விருட்ச வாகனத்தில் மன்னார்குடி ராஜமன்னார் வேணுகோபாலகிருஷ்ணர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமிதமாக நான்குமாட வீதிகளில் உலா வந்தார். சொர்க்கத்தில் தேவர்களுக்கு கேட்கும் வரம் அருளிய கற்பக விருட்ச மரம் போன்று கலியுகத்தில் பக்தர்களுக்கு கேட்கும் வரம் அருளும் வகையில் மலையப்பசுவாமி இக்கோலம் பூண்டிருப்பதாக ஐதீகம் கூறப்படுகிறது.

இதில் பக்தர்களின் கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட தெய்விக நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பச்சைக்கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. மாலை நான்கு மணிக்கு ஏழுமலையான் கோவில் பெரிய ஜீயர் மடத்தில் மாலை மற்றும் பட்டு வஸ்தரங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு நான்குமாட வீதியில் ஊர்வலமாக வீதிஉலா கொண்டுவரப்பட்டு கோவிலில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: