ஓ.எல்.எக்ஸ் விளம்பரம் மூலம் நூதன முறையில் செல்போன் திருட்டு: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நபர் கைது

சென்னை: சினிமா திரைக்கதைக்கு விதவிதமான குற்றபாணிகளை உருவாக்கி தருவது பெரும்பாலும் குற்றவாளிகளாகத்தான் இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரை அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஹரி பிரசாத் எனும் மோசடி  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட  ஹரி பிரசாத் குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் இருந்தவராவார். சிறையில் இருந்து வெளியில் வந்தவன் நூதனமுறையில் திருடும் பாணியை கையாண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட தொடங்கியுள்ளான் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். சென்னை முகப்பேரை சேர்ந்த மருத்துவர் விக்னேஷ் ராஜ் என்பவர் கடந்த 22ம் தேதி ஓ.எல்.எக்ஸ் மூலம் தனது 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை விற்பதற்காக விளம்பரம் செய்துள்ளார். அதனை பார்த்து அவரை தொடர்பு கொண்ட ஹரி பிரசாத், செல்போனை தான் வாங்கி கொள்வதாகவும் நேரில் கொண்டு வரும் படியும் கூறியுள்ளான்.

இதற்கிடையில் அதே ஓ.எல்.எக்ஸ் செயலியில் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு உதவ தயார் என ஒரு உதவி  பேராசிரியை ஒருவர் விளம்பரம் செய்திருந்ததை பார்த்து அவரையும் தொடர்பு கொண்டு நேரில் வரவழைத்துள்ளான். இந்த இருவரையும் வரவழைத்த இடம் முகப்பேர் பகுதியில் உள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகம். ஆனால் முதலில் அந்த உதவி பேராசிரியை வரவழைத்து, செல்போன் கொண்டு வரும் மருத்துவரை அரை மணி நேரம் தாமதமாக வர கூறியுள்ளான். இதனிடையே தான் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவன் என்றும், தனக்கு உதவ வேண்டும் என்றும் சகஜமாக பேசிக்கொண்டு உதவி பேராசிரியை பார்த்து உங்களை பார்த்தால் எனது மூத்த சகோதரி போல் உள்ளது என கூறி அவரை பாசத்தில் கரைய வைத்துள்ளான். சிறிது நேரத்தில் மருத்துவர் விக்னேஷ் தனது செல்போனை காண்பிக்க அங்கு வந்து சேர, எதிரில் அமர்ந்திருந்த உதவி பேராசிரியை தனது சகோதரி என அறிமுகப்படுத்தியுள்ளான்.

தனது சகோதரியுடன் பேசி கொண்டிருக்குமாறு கூறிவிட்டு செல்போனை வாங்கி அதில் தனது சிம்கார்டை போட்டு பேசிக்கொண்டே வெளியில் சென்ற ஹரி பிரசாத் அப்படியே தலைமறைவாகிவிட்டான். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து மருத்துவர் விக்னேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த  அம்பத்தூர் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி நபரான ஹரி பிரசாத்தை தேடி வந்தனர். முகப்பேர் பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா மூலம் அவன் போகும் வழியெல்லாம் பின் தொடர்ந்து மேடவாக்கத்தில் வைத்து அவனை கைது செய்துள்ளனர். என்னதான் குற்றவாளிகள் விதவிதமான குற்றப்பாணிகளை கையாண்டாலும் அவர்களை சிக்க வைக்கும் சிசிடிவி கேமராக்கள் எங்கு பார்த்தாலும் இருப்பதால் காவல் துறையினர் எளிதாக பிடித்து விடுகின்றனர்.

Related Stories: