வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் பிரதமர் தொகுதி; கங்கை, யமுனையில் வெள்ளப்பெருக்கு

வாரணாசி: கனமழை எதிரொலியாக உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. கங்கை, யமுனை நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களை மூழ்கடித்துள்ளது. பிரக்யா கிரஷ் மாவட்டமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலியா மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் 900 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசத்தில் மட்டும் மழை வெள்ளத்திற்கு 93 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் வெளுத்துவங்கிய மழையால் பன்சூலுரி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 15 கிராமங்கள் வெள்ளக்காடாகி இருக்கின்றன.

தும்கா என்ற இடத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மால்டா, கட்டாவளி உள்ளிட்ட இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் இருந்து நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: