நிதி ஆயோக் ஆய்வறிக்கை பள்ளி கல்வி தரத்தில் கேரளாவுக்கு முதலிடம்': 7வது இடத்தில் தமிழகம், கடைசி இடத்தில் உ.பி.

புதுடெல்லி:  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஒத்துழைப்புடன், பள்ளிகளின் வெற்றி-பள்ளி கல்வியின் தரம் குறித்த குறியீடு என்ற தலைப்பில் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை நிதி ஆயோக் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 2016- 2017ம் ஆண்டின் கல்வி தரவுகள் மற்றும் கற்றல், அணுகுமுறை, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில் பள்ளி கல்வி தரத்தில் 76.6 சதவீதம் பெற்று கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. 36.4 சதவீதத்துடன் உத்தரப் பிரதேசம் பட்டியலில் கடைசியில் உள்ளது. 8 சிறிய மாநிலங்களில் மணிப்பூர், திரிபுரா மற்றும் கோவா ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

இவற்றை அடுத்து  மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. 7 யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டெல்லி, புதுச்சேரி, டாமன் மற்றும் டையூ, அந்தமான் நிகோபர் தீவு மற்றும் லட்சத்தீவுகள் அடுத்தடுத்த இடங்களில் பட்டியலில் உள்ளன. ஒட்டு மொத்த செயல்திறன் அடிப்படையில் சிறிய மாநிலங்களில் மணிப்பூர் 68.8 சதவீதமும், அருணாச்சலப் பிரதேசம் 24.6 சதவீதமும் பெற்றுள்ளது. இதேபோல் யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் 82.9 சதவீதம் , லட்சத்தீவுகள் 31.9சதவீதம் பெற்றுள்ளது.

20 பெரிய மாநிலங்களில் 18 மாநிலங்கள் கடந்த 2015-2016 மற்றும் 2016-2017ம் ஆண்டைக்காட்டிலும் தங்களது ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரித்துள்ளன. இவற்றில் அரியானா, அசாம், உத்தரப்பிரதேசம், ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்கள் அதிக அளவில் மேம்பட்டுள்ளன. இவற்றின் சதவீத புள்ளிகள் முறையே 18.5, 16.8, 13.7, 12.4 மற்றும் 10.6 சதவீதமாகும்.  நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பள்ளி கல்வி தரம் குறித்த 20 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 7வது இடத்தை பிடித்துள்ளது

Related Stories: