கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் கலந்துகொள்ள மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு: பாக். வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி தகவல்

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்கவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக் தேவின் சமாதியான கர்தார்பூர் சாஹிப் பாகிஸ்தானில் சர்வதேச எல்லையை ஒட்டி ராவி நதிக்கரையில் அமைந்து உள்ளது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இங்கு சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதே போல பாகிஸ்தானில் இருந்து கர்தார்பூர் வரையிலான வழித்தடத்தை அமைக்க  சம்மதித்த பாகிஸ்தான், அந்த பணிகளை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே புல்வாமா தாக்குதலை தொடர்ந்தும், பின்னர் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாலும் இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கர்தார்பூர் பாதை திட்டம் கேள்விக்குறியானது. இதை நிறைவேற்ற பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்காது என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், இந்த மோதலுக்கு இடையிலும் இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள், கர்தார்பூர் திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கர்தாப்பூர் சாலை அமைப்பு பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் குருநானக் தேவின் 550ஆவது பிறந்த தினத்தையொட்டி இவ்வழித்தடத்தின் துவக்க விழா வருகிற நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறுவதாக முன்னதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்நிலையில் திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அழைக்கப்படவுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர், ஷா மொகமது குரேசி கூறுகையில்; கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மன்மோகன் சிங்கை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் மத நம்பிக்கை கொண்டவராக இருப்பதாலும், பாகிஸ்தானில் அவர் மிகவும் மதிக்கப்படுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: