திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் பரபரப்பு: செம்மர கடத்தல்காரர்கள் மீது ஆந்திர போலீஸ் துப்பாக்கிச்சூடு

திருமலை: திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். திருவண்ணாமலையை சேர்ந்தவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 19 பேரை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி அல்லாபாஷா தலைமையில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சேஷாசல வனப்பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது, சந்திரகிரி மண்டலம், பீமவரம்  சேஷாசல வனப்பகுதியில் 20 பேர் கும்பல், செம்மரங்களை வெட்டி கடத்தி வந்தனர். இதைக் கண்ட போலீசார், அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால், கடத்தல் கும்பல் செம்மரக்கட்டைகளை ஆங்காங்கே வீசிவிட்டு போலீசார் மீது கற்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமையை சமாளிக்க, போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. போலீசார் விரட்டிச்சென்றதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 19 பேர் தப்பி ஓடிவிட்டனர்.  விசாரணையில் பிடிட்டவர் திருவண்ணாமலை மாவட்டம், நாச்சாமலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (36) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த 2 லட்சம் மதிப்புள்ள 6 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய 19 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: