கொச்சியில் உச்ச நீதிமன்றம் இடிக்க உத்தரவிட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: பிரபல நடிகர், இயக்குனர்கள் வசிக்கின்றனர்

திருவனந்தபுரம்: கொச்சியில்  சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றம் இடிக்க  உத்தரவிட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகளில் நேற்று அதிகாலை மின்சாரம்,  குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொச்சி மரடு  பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 20  மாடிகள் கொண்ட இந்த குடியிருப்பில் சினிமா இயக்குநரும் நடிகருமான மேஜர்  ரவி, நடிகர் சவுபின் சாகிர், இயக்குநர் பிளஸ்ஸி உள்பட முக்கிய பிரமுகர்கள்  வசித்து வருகின்றனர். இந்த அபார்ட்மெண்டுகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி  கட்டியதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை  நடத்திய உச்சநீதிமன்றம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள அபார்ட்மென்டுகளை  இடிக்க கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இதுதொடர்பாக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து பலமுறை உச்சநீதிமன்றம் கேரள அரசை  கடுமையாக எச்சரித்தும் கேரள அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உடனடியாக அந்த கட்டிடங்களை இடிக்காவிட்டால கேரள அரசு தலைமை செயலாளரை கைது  செய்ய உத்தரவிட வேண்டியது வரும் என உச்சநீதிமன்றம் எச்சரித்தது. இதையடுத்து  4 குடியிருப்புகளையும் இடிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கியது.

இதற்கிடையே  அடுக்குமாடி குடியிருப்பை இடிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்ைக தாக்கல் செய்ய  உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி அக்டோபர் 11ம் தேதி முதல் அபார்ட்மென்ட் இடிக்கும் பணி தொடங்கும் என்றும்,  அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் பணிகளை முடிக்க   திட்டமிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கேரள  மின்வாரிய அதிகாரிகள் ஒரே சமயத்தில் 4 குடியிருப்புகளிலும் மின் இணைப்பை  துண்டித்தனர். அதைதொடர்ந்து குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.  அதிகாலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்த குடியிருப்பு வாசிகள்  அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று காலை முதல்  அங்கு வசிப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மனித உரிமை மீறல் என்று  அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் வரும் 29ம் தேதி முதல் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் வெளியேறமாட்டோம் என்று அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: