நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சிறப்பானது: துணை ஜனாதிபதி பேச்சு

புனே: ‘‘நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல்களை விட, ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது சிறப்பானது,’’ என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று, புனியபூஷன் விருது வழங்கும் விழாவில்  பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரபல தொல்பொருள் ஆய்வாளர் ஜி.பி தெக்லுருக்கு அவர் விருதை வழங்கி கவுரவித்தார். பின்னர், வெங்கையா நாயுடு பேசியதாவது:  தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதனால், நமது வீட்டு விழாக்களுக்கு கூட மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள் வருவதில்லை. நாட்டில் அடிக்கடி நடக்கும் தேர்தல் என்னை கவலையடையச் செய்கிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஒன்றரை மாதங்கள் அமலில் இருப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதனால், பொதுப்பணிகள் நடைபெறுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.தொல்பொருள் ஆய்வு நம்மை வசீகரிக்கும் தன்மை கொண்டவை. வரலாற்றை திருத்தவும், மறு கட்டமைப்பு செய்யவும் உதவும் சாதனமாக தொல்பொருள் துறை விளங்குகிறது. பல்வேறு கலாசாரம், நாகரீகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் உதவுகின்றன. இவை பிற நாகரீகத்தை மட்டுமின்றி நமது நாகரீகத்தையும் மீண்டும் கண்டுபிடிக்க உதவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: