நிலவில் தரையிறங்க முடியாதது ஏன்? விக்ரம் லேண்டரின் கோளாறை கண்டறிய தேசிய அளவில் குழு: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

அகமதாபாத்: ‘‘சந்திரயான் -2ன் விக்ரம் லேண்டரில் ஏற்பட்ட தவறை கண்டறிய தேசிய அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது,’’ என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.  நிலவில் ஆய்வுகள் செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ சமீபத்தில் ஏவியது. அதில், லேண்டர் நிலவில் தரையிறங்கிய போது பெங்களுரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்துடனான தொடர்பை இழந்தது. ஆனாலும், ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் `உருமாறும் இந்திய நடைமுறை’ என்பது தொடர்பான தேசிய மாநாட்டில் பங்கேற்க இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று அங்கு சென்றார். அப்போது, அகமதாபாத் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்காதது தொடர்பாக ஆய்வு செய்ய தேசிய அளவிலான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ததும் எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.  சந்திரயான்-2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது. தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டரில் இருந்து எங்களுக்கு எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. வரும் ஆண்டுகளில் தொடர்ந்து பல்வேறு விண்வெளி பயணங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில், மிக முக்கியமானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் கங்கன்யான் திட்டமாகும். இந்த திட்டத்தின்படி 3 விண்வெளி வீரர்கள் வரும் 2022ம் ஆண்டில் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்படுவார்கள். இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: