தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு உச்ச நீதிமன்ற உத்தரவு மீறி ஆலைகளுக்கு தாமிரபரணி நீர் வழங்கியது ஏன்?

தூத்துக்குடி: உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறி தாமிரபரணி தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கியது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கமளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியில் இருந்து தொழிற்சாலைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுப்பதற்குகூட அனுமதியில்லாத நிலையில் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்ஜிடி திட்டத்தின் மூலம் தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு தினமும் 9.20 கோடி லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தை 2011 முதல் செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு நிரந்தரமாக தடை விதிக்க கோரி பசுமை தீர்ப்பாயத்தில் திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வக்கீல் எஸ்.ஜோயல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதில் 28.11.2018 அன்று, ‘ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் வழங்கக்கூடாது, என்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு தடை விதிக்ககோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 4.2.2019ல் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கு போக மீதமிருந்தால் மட்டுமே 20 எம்.ஜி.டி திட்டத்தில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் உள்ளிட்ட மற்ற தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கவேண்டும், குடிநீர் தேவைக்கு மேல் தண்ணீர் இல்லாவிட்டால் வழங்ககூடாது என்ற நிபந்தனையுடன் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க 2 மாதத்திற்குள் மத்திய அரசின் அனுமதியை பெறவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். இருப்பினும் இன்றுவரை எவ்வித முறையான அனுமதியுமின்றி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதாக கூறி, பசுமை தீர்ப்பாயத்தில் ஜோயல் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்தியவான்சிங் காபிரியேல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று முன்தினம் அளித்த உத்தரவில்,  ‘ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றமும், பசுமை தீர்ப்பாயமும் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த உத்தரவுகளை மீறி எப்படி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது?.

நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி, முறைகேடாக செயல்பட்டு வரும் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தலைமைச் செயலாளர் அக்.21ல் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்’ என கூறியுள்ளது. மேலும், குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளதாக வக்கீல் ஜோயல் தெரிவித்தார்.

Related Stories: