தூய்மை இந்தியா திட்டத்திற்காக 'உலக கோல்கீப்பர் விருது': பில்கேட்ஸ் அறக்கட்டளை இன்று பிரதமர் மோடிக்கு வழங்குகிறது

நியூயார்க்: பில்கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளை சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோல்கீப்பர் விருது இன்று வழங்கப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த  நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக  கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் உலக கோல்கீப்பர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்  அறிவித்தது.

இந்நிலையில், ஒருவார கால பயணமாக அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, ஹூஸ்டனில் நேற்று முன்தினம் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அவருடன் அதிபர்  டிரம்பும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து, ஐநாவின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அவர் நியூயார்க் புறப்பட்டார். நேற்று காலை நியூயார்க் ஜேஎப்கே சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஐநாவுக்கான  இந்தியாவின் நிரந்தர தூதர் சயீத் அக்பரூதீன் வரவேற்றார். இந்நிலையில், ஐநாவின் 74வது பொதுச் சபை கூட்டம் நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக, பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு நடைபெற்றது.

ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ் தலைமையில் நடந்த இம்மாநாட்டில், பிரதமர் மோடி உள்ளிட்ட 75 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.  தொடர்ந்து, இன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் சர்வதேச சாதனையாளர் விருது (உலக கோல்கீப்பர்) பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. நியூயார்க் நகரில் இன்று நடைபெற உள்ள  நிகழ்ச்சியில் உலக கோல்கீப்பர் விருதை பிரதமர் மோடி பெற உள்ளார். பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 9 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: