17 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் விளக்கம் கேட்டு சபாநாயகர் அலுவலகத்துக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு, விசாரணை நாளை ஒத்திவைப்பு

பெங்களூரு: கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி 17 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம்,   விளக்கம் கேட்டு சபாநாயகர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் ஆட்சியின்போது பதவியிழந்த 15 எம்எல்ஏ.க்கள், அப்போதைய சபாநாயகர் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் என்.வி.ரமணா, அஜய் ரஸ்தோகி மற்றும் கிருஷ்ணாமூராரகா ஆகியோர் வழக்கை விசாரித்தனர். மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி ஆஜராகி வாதம் செய்தபோது,  ‘‘மனுதாரர்களின் முழுமையான விளக்கத்தை  பெறாமல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறித்து அப்போதைய சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், 2023ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்ததும் தவறு. ஆகவே சபாநாயகரின் உத்தரவை ரத்து  செய்ய வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவி பறிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உள்ளது. கர்நாடகாவில் தற்போது காலியாக உள்ள 15 பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம்  இடைத்தேர்தல் தேதி அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பதவி பறிக்கப்பட்டவர்கள் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.

காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிடும்போது, ‘‘இவ்வழக்கு எந்த விதிமீறலும் இல்லாமல் சட்டத்திற்கு உட்பட்டுள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தை சரியான காரணத்திற்காக பயன்படுத்திதான் சபாநாயகர்  நடவடிக்கை எடுத்துள்ளார். இதில் விதி மீறல் எதுவுமில்லை’’ என்றார்.தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ‘‘இடைத்தேர்தலுக்கு தடை விதிப்பது அல்லது ஒத்தி வைக்கும் பேச்சுக்கு இடமில்லை. இந்த வழக்கிற்கும் ஆணையத்திற்கும் சம்மந்தமில்லை. பதவி பறிக்கப்பட்டவர்கள்  தேர்தலில் போட்டியிடுவதிலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’’ என்றார்.அதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கர்நாடக மாநில சபாநாயகர் அலுவலகம், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் சித்தராமையா, மஜத சட்டப்பேரவை கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி மற்றும் மாநில காங்கிரஸ்  தலைவர் தினேஷ்குண்டுராவ் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்த விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு (நாளைக்கு) ஒத்தி வைத்தனர். மேலும் தற்போது 15 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

Related Stories: