திருவட்டார் பெருமாள் கோயிலில் 12 கிலோ நகை கொள்ளையில் கைதான 23 பேருக்கு தண்டனை: 30 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு; உடனடி ஜாமீன்

நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நடந்த 12 கிலோ நகை கொள்ளை  வழக்கில் கைதான 23 பேருக்கு சிறை தண்டனை அளித்து 30 ஆண்டுக்கு பிறகு நாகர்கோவில் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. உடனடியாக  அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில்  108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள பெருமாளின் சிலை கடுகு சர்க்கரையோகம் மற்றும் 16 ஆயிரத்து 8 சாலக்கிராமத்தால் செய்யப்பட்டது. இதனால்  அபிஷேகம் நடைபெறுவது இல்லை. இந்த மூலவரின் மீது பொருத்தப்பட்டிருந்த தங்கத்தகடுகள் 12 கிலோ கொள்ளை போயிருந்தது. 1974 முதல் 1984 வரையான காலகட்டத்தில் இந்த கொள்ளை நடைபெற்றிருந்தது. இதுதொடர்பாக திருவட்டார்  போலீசார் 34 பேர் மீது 1989ல் வழக்குபதிவு செய்திருந்தனர். பின்னர், 16.6.1992ம் ஆண்டு சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கோயில் ஊழியர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் உட்பட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையில் 11  பேர் இறந்துவிட்டனர். இதர 23 பேர் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி கிறிஸ்டின் அறிவித்தார். தொடர்ந்து அவர்களுக்கான தண்டனை விபரங்கள், தனித்தனியே அறிவிக்கப்பட்டது. இதில் 14  பேருக்கு தலா 6 வருடம் சிறை தண்டனையும், 9 பேருக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் ஒருவர் தவிர 22 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: