ரயில் நிலையங்களில் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள்: விரைவில் அமைக்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்

வேலூர்: ரயில் நிலையங்களில் மீண்டும் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள ரயில்வேத்துறையில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் நகரும் மின்படிக்கட்டுகள், மின்தூக்கிகள், இலவச இணைய சேவை, கண்காணிப்பு கேமராக்கள், குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள், தானியங்கி ஸ்மார்ட் டிக்கெட் இயந்திரங்கள், ரூபாய் நோட்டுகளை பெற்று சில்லரை வினியோகிக்கும் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் ரயில்வே துறையை படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் முதல்கட்டமாக முக்கிய ரயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேபோல், தனியார் பங்களிப்புடன் தங்கும் விடுதிகள், துரித உணவகம், மொபைல் ஆப் கால்டாக்ஸி சேவை ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ரயில் நிலைய வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் டிக்கெட் வினியோகம், உணவு, ரயில் நிலைய துப்புரவு பணி, பாதுகாப்பு பணி போன்றவையும் தனியார் மயமாகிறது.

இந்நிலையில் ரயில் நிலையங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்த எடை பார்க்கும் இயந்திரங்களை மீண்டும் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘முன்பு அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் இயந்திரத்தில் ₹2 நாணயத்தை செலுத்தி தங்களது உடல் எடை மற்றும் மருத்துவ டிப்ஸ்கள், பொன்மொழி வாசகங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டனர். நாளடைவில் முறையான பராமரிப்பின்றி அவை ஓரங்கட்டப்பட்டன.

இந்நிலையில், அனைத்து வகையிலும் சில்லரை வருவாயை ஈட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, முக்கிய சந்திப்பு ரயில் நிலையங்களில் அதிநவீன உடல் எடை பார்க்கும் இயந்திரங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. 2019-20ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல் எடை, உயரம், அதனை தொடர்வதற்கான ஆரோக்கிய டிப்ஸ்கள் ஆகியவற்றை எடை அளவுடன் அறிந்து கொள்ளலாம். இதில் கிடைக்கும் வருவாயில் 60 சதவீதம் ரயில்வேக்கும், 40 சதவீதம் தனியாருக்கும் வழங்கப்படும்’ என்றனர்.

Related Stories: