மத்திய அரசின் ‘உஜாமித்ரா’ மென்பொருள் மூலம் மின்தடை, மின் கட்டண தகவல்கள் இனி செல்போனிலேயே வந்துவிடும்: மென்பொருள் மூலம் செல்போனுக்கு வந்துள்ள மின்தடை குறித்த தகவல்

வேலூர்: நாட்டின் அனைத்து துறைகளும், துறை சார்ந்த நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மின்வாரியத்தில் மின்நுகர்வு அளவு எடுத்தல் நவீன முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மின்மீட்டர்கள் டிஜிட்டல் மீட்டர்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி மின்நுகர்வோருக்கு மின்கட்டணம் குறித்த குறுந்தகவல் நுகர்வோரின் செல்போனுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் மின்நுகர்வு தொடர்பான புகார்களை நேரிடையாகவோ அல்லது போன் மூலமோ தெரிவித்து அவற்றை பதிவேட்டில் பதிந்து பின்னர் நுகர்வோரின் குறைகளை களையும் நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.

அதோடு மின்குளறுபடிகளும், துணை மின்நிலையத்தின் மின்சப்ளை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கணினி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மின்நுகர்வோர்களின் தொலைபேசி எண்களும் மத்திய அரசு உருவாக்கியுள்ள ‘உஜாமித்ரா’ என்ற புதிய மென்பொருளில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாட்டின் எந்த இடத்தில் மின்தடை என்றாலும் சம்பந்தப்பட்ட மின்நிலைய எல்லைக்குள் உள்ள நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாக சென்றடையும். விரைவில் மின்கட்டணம் உட்பட மின்நுகர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் இதன் சேவை விரிவாக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதுகுறித்து வேலூர் மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நந்தகோபாலிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘உஜாமித்ரா’ என்ற மென்பொருளை மின்நுகர்வோருக்காக உருவாக்கியது. இதற்கான மெயின் சர்வர் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள மின்நுகர்வோரின் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இருந்தும் மின்நுகர்வோரின் மொபைல் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அப்டேட் செய்யப்பட்டதும் ‘உஜாமித்ரா’ மென்பொருள் மூலம் மின்தடை உட்பட மின்நுகர்வு தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்தியாக அனைவருக்கும் கிடைக்கும். இப்போதே இணைக்கப்பட்ட மொபைல் எண்களுக்கு தகவல்கள் வருகின்றன’ என்றார்.

Related Stories: