கட்சி தாவி சென்றவர்கள் சுயமரியாதையற்ற கோழைகள்: சரத் பவார் ஆவேசம்

நவி மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜ.வுக்கு தாவியவர்கள் கோழைகள் என்றும், சுயமரியாதை இல்லாதவர்கள் என்றும் சரத் பவார் கூறினார். ஏப்ரல் மற்றும் மே மாதம் நடந்த மக்களவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அந்த கட்சியைச் சேர்ந்த பலர் பாஜ.வுக்கு தாவினர். இவர்களில் கட்சியின் மாநில பெண்கள் பிரிவு தலைவர் சித்ரா வாக், முன்னாள் மாநில அமைச்சர் மதுகர் பிச்சாத், அவருடைய மகன் வைபவ் பிச்சாத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இது பற்றி சரத் பவார் கூறியதாவது: கட்சி மாறியவர்கள் சுயமரியாதை இல்லாத கோழைகள். தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்வதும் அதிகரித்துவிட்டது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் பாஜ அரசு தோல்வி அடைந்துவிட்டது. அப்படி இருக்கும் போது அந்த கட்சியில் சேருவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது?. கட்சி தாவியவர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள் என்று நம்பினேன். ஆனால் அவர்கள் என் நம்பிக்கைக்கு மாறாக தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ்வாறு சரத் பவார் கூறினார்.

Related Stories: